

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட 4-வது கட்ட லாக்டவுனில் பல்வேறு விதிமுறை தளர்வுகள் கொண்டுவரப்பட்ட போதிலும் நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட 3 கட்ட லாக்டவுன் முடிந்து 4-வது கட்ட லாக்டவுன் நடைமுறையில் இருக்கிறது. இந்த லாக்டவுனில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் அதைப் பின்பற்றி டெல்லி அரசும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
பேருந்து, தனியார் வாகனங்கள், கால் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றுக்கு டெல்லி அரசு அனுமதித்துள்ளது. மேலும், மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஒரு வார காலத்தில் டெல்லியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை சற்று உயர்ந்தபோதிலும் கவலைப்படத் தேவையில்லை என முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவால் காணொலி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''4-வது கட்ட லாக்டவுனில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர முயல்கிறோம். இந்தக் காலகட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஆனால், கரோனாவால் பாதிக்கப்படுவது பெரிய கவலையளிக்கும் விஷயமல்ல. பாதிப்புக்கு இணையாக நாள்தோறும் மக்கள் குணமடைந்து வருகிறார்கள்.
கரோனா வைரஸால் நோயாளிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டாலும் அந்தச் சூழலைச் சமாளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அதைச் சந்திக்கவும் அரசு தயாராக இருக்கிறது. தனியார், அரசு மருத்துவமனை சார்பில் கரோனா நோயாளிகளுக்காக 4,500 படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கைகளைத் தனியார் மருத்துவமனைகள் ஒதுக்கியுள்ளன. கரோனா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டால் வீட்டில் சிகிச்சை எடுக்க முடியாதவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல நினைத்தால் படுக்கை வசதி இருக்கிறதா என்பதைக் கண்டறிய புதிய முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருப்பதால், கரோனா நோயாளிகள் நிச்சயம் அதிகரித்திருப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும், அச்சப்படத் தேவையில்லை, கவலைப்படத் தேவையில்லை. சூழலை நாங்கள் கட்டுக்குள்தான் வைத்திருக்கிறோம். கடந்த 7 நாட்களில் 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு விஷயங்கள் நடந்தால் மட்டும்தான் கவலைப்பட வேண்டும். ஒன்று கரோனாாவில் அதிமான உயிரிழப்புகள் நடப்பது, 2-வதாக நோயாளிகள் அதிகரித்து மருத்துவ சிகிச்சை முறை சீர்குலைந்து மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் இருப்பது.
கரோனாவில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 3,414 நோயாளிகள் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை எடுத்து வருகிறார்கள். 6,540 பேர் குணமடைந்துவிட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் 3,829 படுக்கைகள் இருக்கின்றன. இதில் 1,478 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. 2,500 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. 250 வென்டிலேட்டர்களில் 11 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன''.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.