Published : 25 May 2020 03:48 PM
Last Updated : 25 May 2020 03:48 PM
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கரோனா பாதிப்பிலிருந்து பெருமளவு சிக்காமல் தப்பித்து வந்த வடகிழக்கு மாநிலங்கள், ரயில் போக்குவரத்து தொடங்கிய பின் கரோனாவின் பிடிக்குள் சிக்கத் தொடங்கியுள்ளன.
நாட்டில் கரோனா நோயாளிகள் பாதிப்பு என்ற உச்சத்தைத் தொட்டபோது கூட கரோனாவின் தடம் தெரியாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் இப்போது முதல் நபர் பாதிக்கப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசம், அசாம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிசோரமிலும் தற்போது கரோனா தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா நோய் அதிகரித்து வந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கரோனா தொற்று இல்லாமல், மிகக்குறைவாகவும் இருந்து வந்தது. அசாமில் மட்டும்தான் சில நூறுகளில் கரோனா பாதிப்பு இருந்துவந்தது. மற்ற மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிசோரம், சிக்கிம் மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை 10 நபர்களைக் கூட தாண்டவில்லை.
அதற்கு முக்கியக் காரணம் அந்த மாநில அரசுகள் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்களை அமல்படுத்தியது, ஊரடங்கில் தளர்வுகளை காட்டாமல் அமல்படுத்தி, வெளியிலிருந்து வருவோரை கண்டிப்பாக தனிமைப்படுத்தி பரிசோதித்து வந்தது. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் பாதுகாப்பாக இருந்து வந்தன.
அதுமட்டுமல்லாமல் முக்கியக் காரணமாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பலர் பல்வேறு மாநிலங்களில் பணிக்காகவும், படிப்புக்காகவும், வர்த்தகம் செய்யவும் சென்றிருந்தார்கள். இவர்கள் வருகை மாநிலத்துக்குள் அதிக அளவு இல்லாததால் கரோனா பாதிப்பு குறைந்திருந்தது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்பட்டபின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மெல்ல, மெல்ல பயணிக்கத் தொடங்கியபின் அந்த மாநிலங்களில் கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியது.
இன்று முதல் உள்நாட்டு விமானச் சேவையும் தொடங்கப்பட்டிருப்பதால் இனிவரும் நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் மாநிலத்துக்குள் வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நிலையான நெறிமுறைகளை வகுத்து அறிவித்துள்ளன.
கடந்த 60 நாட்களாக கரோனாவின் பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 வயது மாணவர் ஒருவர் டெல்லியிலிருந்து கடந்த 21-ம் தேதி சிக்கிம் வந்துள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 18-ம் தேதி டெல்லியிலிருந்த ஒருவருக்கு கரோனா உறுதியானது. இப்போது அவரும் குணமடைந்ததால், கரோனா இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் சனிக்கிழமை இரவு 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அங்கு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. திரிபுராவில் எல்லைப் பாதுகாப்பு படையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது அதில் 161 பேர் பிஎஸ்எப் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் 200க்கும் குறைவாக கரோனா நோயாளிகள் இருந்த நிலையில் ரயில் போக்குவரத்து தொடங்கியபின் தொழிலாளர்கள் வருகை அதிகரித்துள்ளது. அசாமாில் தற்போது 398 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 392 பேர் அரசின் தனிமை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் கிழக்கு மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. குறிப்பாக தீமாஜி மாவட்டம் அதைச் சுற்றியுள்ள பகுதியில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஆனால் மத்திய அசாமில் உள்ள ஹோஜயாவில் அதிகபட்சமாக 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் குறைந்தபட்சம் 2 ஆயிரம் பயணிகள் அசாமுக்குள் வருவார்கள் என மாநில அரசு கணித்துள்ளது. இதில் வர்த்தக ரீதியாக வந்து 10 மணிநேரத்துக்குள் செல்வோருக்கு தனிமை முகாம் தேவையில்லை. மற்றவர்களுக்குத் தனிமை முகாம் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல மேகாலயாவில் கரோனாவில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 12 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் இருக்கிறார். ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து தொடக்கத்தால் அடுத்துவரும் நாட்களில் கரோனா அதிகரிக்கும் அச்சத்தால் பல முன்னேற்பாடுகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் மேகாலயா அரசு வெளியிட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் கண்டிப்பாக 48 மணிநேரம் தனிமை முகாமில் இருக்க வேண்டும். பரிசோதனை முடிவில் நெகட்டிவாக இருந்தால் மாநிலத்துக்குள் செல்லலாம், இல்லாவிட்டால் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஒருவர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், மாநிலத்தின் அனுமதியின்றி மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் யாரும் உள்ளே வரக்கூடாது. அவ்வாறு மிசோரத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் முன் அனுமதி பெறாமல் மாநிலத்துக்குள் விமானம் மூலம் வந்தால், விமான நிலையத்தை விட்டுச் செல்லக்கூடாது என விதிமுறை விதித்துள்ளது.
ரயில் போக்குவரத்து, உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடக்கத்தால் கரோனா பரவலை எதிர்கொள்ள வடகிழக்கு மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கரோனாவிலிருந்து தப்புவார்களா அல்லது பிடிக்குள் சிக்கிவிட்டார்களா என்பது வரும் காலங்களில் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT