Last Updated : 25 May, 2020 02:26 PM

2  

Published : 25 May 2020 02:26 PM
Last Updated : 25 May 2020 02:26 PM

மக்கள் நலனில் அதிக அக்கறை காட்டுங்கள்; விமான நடு இருக்கையில் பயணிகளை 10 நாட்களுக்கு மட்டும் அமர வைக்கலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

கோப்புப்படம்

புதுடெல்லி

பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் அடுத்த 10 நாட்கள் வரை பயணிகளை அமரவைத்து விமானங்களை இயக்கலாம் என்று மத்திய அரசுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கும் உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

அதேசமயம், கரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் மக்களின் நலனைப் பற்றி அரசு அதிகமாகக் கவலைப்பட வேண்டும். வர்த்தகரீதியான விமான நிறுவனங்கள் போல் இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஏர் இந்தியா விமானத்தின் விமானி தேவன் கனணி மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ கடந்த 22-ம் தேதி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்துத் துறை ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விமானத்தில் நடுப்பகுதி இருக்கையை நிரப்பாமல் இயக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்து.

ஆனால், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமானத்தில் இந்த பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நடுப்பகுதி இருக்கையில் பயணிகள் அமரவைக்கப்பட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், பயணிகள் நடுப்பகுதி இருக்கையில் அமரவைக்கப்பட்டு சமூக விலகல் இல்லாமல் இருந்தது குறித்த புகைப்படத்தையும் ஆதாரமாக நீதிமன்றத்தில் விமானி அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “ஜூன் 2-ம் தேதிக்குள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நடுப்பகுதி இருக்கையை நிரப்பத் தடை விதிக்கப்படுகிறது'' என்று உத்தவிட்டது.

இந்தத் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசும், விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் அவசர மனுவைத் தாக்கல் செய்து விசாரிக்கக் கோரின. விடுமுறை நாளான இன்று மனுவின் அவசரம் கருதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏஎஸ். போபண்ணா, ஹிர்ஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் காணொலி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர் வாதிடுகையில், “கரோனாவைத் தடுப்பதில் சிறந்த வழிமுறை என்பது சமூக விலகல் அல்ல, பரிசோதனைதான். இருக்கை வேறுபாடோ அல்லது இடைவெளியோ அல்ல.

நடுப்பகுதி இருக்கை காலியாக விட வேண்டாம் என்று வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்தபின்புதான் இருக்கையை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் புதிய சுற்றறிக்கையும் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. குடும்பத்துடன் வருபவர்கள் 3 பேராக இருக்கையில் அமரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “ நடுப்பகுதி இருக்கையிலும் பயணிகள் அமர்ந்தால், கரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும்? இது விமானம், இதில் யாரையும் தொற்றக்கூடாது என வைரஸுக்கு தெரியுமா, அல்லது எந்தப் பயணியும் பாதிக்கப்படாமல் இருப்பார்களா. சமூக விலகல் இல்லாமல் அமர்ந்திருந்தால் நிச்சயம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

அப்போது துஷார் மேத்தா, “வரும் ஜூன் 6-ம் தேதி வரை அனைத்து முன்பதிவும் முடிந்துவிட்டது. நடுப்பகுதி இருக்கையும் நிரப்பப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “ஜூன் 6-ம் தேதி வரை அதாவது அடுத்த 10 நாட்கள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைத்துக்கொள்ளலாம். அதன்பின் அமரவைக்கக் கூடாது. நடுப்பகுதி இருக்கையை முன்பதிவில் காட்டக்கூடாது.

வர்த்தகரீதியில் செயல்படும் விமான நிறுவனங்கள் போல் செயல்படாமல், அவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், மக்களின் நலனில் மத்திய அரசு அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டும். மக்களின் நலன், பயணிகளின் நலன் கருதி விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் விதிமுறைகளை மாற்ற முடியும்.

இந்த விவகாரத்தில் ஜூன் 2-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் தேவைப்பட்டால் விசாரிக்கலாம். விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக விமானி தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்து மும்பை உயர் நீதிமன்றமே முடிவு செய்யலாம்.

பயணிகளின் நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏர் இந்தியா மட்டுமல்லாமல், மற்ற விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x