Published : 25 May 2020 09:20 AM
Last Updated : 25 May 2020 09:20 AM

கரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகளை சிறப்பு ரயிலில் பயன்படுத்த முடிவு

கோப்புப்படம்

புதுடெல்லி

ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று முன்தினம் கூறியாதாவது:

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 5,213 ரயில் பெட்டிகளை மாற்றி அமைத்துள்ளோம். இவற்றில் 8,000 படுக்கைகள் உள்ளன. விரும்பும் மாநிலங்களுக்கு இவற்றைஅனுப்ப முடியும். என்றாலும் இதுவரை அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே இவற்றில் 50 சதவீதத்தை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ‘ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். எஞ்சிய 50 சதவீதபெட்டிகள், கரோனா சிகிச்சைக்காக தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும் என்றார்.

மாற்றி அமைக்கப்பட்ட பெட்டிகளில் நடுவில் உள்ள ‘பெர்த்’ நீக்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகளை பயன்படுத்தும்போது வழக்கத்தைவிட குறைந்த நபர்களே பயணிக்கமுடியும். மேலும் இப்பெட்டிகளில் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் உள்ளிட்ட சாதனங்கள் உள்ளன. இவை நீக்கப்படும்.

இந்தப் பெட்டிகள் பயன்பாட்டுக்கு 215 ரயில் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தன. எனினும் ஒரு பெட்டிகூடஇதுவரை பயன்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “இப்பெட்டிகளை மாற்றி அமைக்க பெட்டிக்கு ரூ.2 லட்சம் செலவானது. இவற்றைமீண்டும் ரெகுலர் பெட்டியாக மாற்ற பெட்டிக்கு ரூ.1 லட்சம் செலவாகும். என்றாலும் அவ்வாறு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்படும்போது இவை பயன்படுத்திக் கொள்ளப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x