Last Updated : 24 May, 2020 01:34 PM

1  

Published : 24 May 2020 01:34 PM
Last Updated : 24 May 2020 01:34 PM

கேஜ்ரிவாலுக்கு மீண்டும் நெருக்கடி: டெல்லியில் கரோனாவில் 600 பேர் உயிரிழப்பா? 3 மடங்கு பலி அதிகம் என உள்ளாட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரழந்தவர்கள் எண்ணிக்கையில் போலியான கணக்கு காட்டப்படுகிறது. உண்மையில் தற்போது டெல்லி அரசு கணக்கிடும் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு உயிரிழப்பு அதிகம் என்று டெல்லி வடக்கு மாநகராட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டு ஆம் ஆத்மி அரசு மீது வைக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கைக்கும் அரசு வெளியிடும் எண்ணிக்கைக்கும் ஏராளமான இடைவெளி இருப்பதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கையிலும் போலியாகக் கணக்கு காட்டப்படுவதாகவும் கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது.

அவ்வாறு எந்தப் பொய்யான கணக்கும் காட்டவில்லை என்று துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா கூறினார். ஆனால், இப்போது டெல்லி வடக்கு மாநாகராட்சி நிர்வாகிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான மறுப்பும், பதிலும் முதல்வர் கேஜ்ரிவால் தரப்பிலிருந்து வரவில்லை.

டெல்லியின் வடக்கு மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவரும் பாஜக நிர்வாகியுமான ஜெய் பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''டெல்லியில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உண்மையான கணக்கு வெளிவரவில்லை. கடந்த 21-ம் தேதி வரை எங்கள் பகுதியில் மட்டும் 282 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கரோனாவால் உயிரிழந்தனர் என மருத்துவ அதிகாரிகள் சான்று பெற்று புதைத்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

டெல்லி தெற்கு மாநகராட்சியின் அவைத் தலைவர் கமலாஜித் ஷெராவத் கூறுகையில், “எங்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் கரோனாவால் 309 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கரோனாவில் உயிரிழந்தார்கள் என அரசு மருத்துவமனை சான்று வழங்கியதால் அதன்படி புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்தோம். ஆனால், மே 21-ம் தேதி டெல்லி அரசு வெளியிட்ட கணக்கின்படி டெல்லியில் 194 பேர் மட்டுமே கரோனாவில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-ம்தேதி வரை 231 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

வடக்கு டெல்லி , தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையே 600 பேருக்கு மேல் செல்லும். டெல்லி அரசு இப்போது கணக்கில் காட்டும் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு பலி அதிகம். மக்களிடம் நல்ல பெயரைப் பெறவும் பொய்யான தகவல்களை ஆம் ஆத்மி அரசு தெரிவிக்கிறது.

கரோனாவில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மக்களிடம் தெரிவிக்க அரசு அஞ்சுகிறது. கரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என முதல்வர் கேஜ்ரிவால் மக்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்கிறார்'' எனக் குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x