Published : 24 May 2020 06:53 AM
Last Updated : 24 May 2020 06:53 AM
‘‘இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைஇருப்பதாக, இஸ்லாமிய நாடுகள்கூட்டமைப்பில் (ஓஐசி) பாகிஸ்தான் புகார் தெரிவித்தது. இதை மறுத்து இந்தியாவுக்கு ஆதரவாக மாலத்தீவு குரல் கொடுத்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ்பரவல் அதிகமானதற்குக் காரணம் இஸ்லாமியர்கள் தான். டெல்லியில்நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் வைரஸ் பரவல்அதிகமானது என்று சமூக வலைதளங்களில் பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அரசியல் உள்நோக்கத்துடனும் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்திலும் சமூக விரோத சக்திகள் இதுபோல் வதந்திகளைப் பரப்பின.
இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில்காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது குறித்தும், ஐ.நா. ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், ‘இஸ்லாமோபோபியா’ என்ற முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு இந்தியாவில் நிலவுகிறது. இதற்கு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியது.
இந்தக் குற்றச்சாட்டை அந்த மாநாட்டிலேயே மாலத்தீவு திட்டவட்டமாக மறுத்தது. இதுகுறித்து மாநாட்டில் ஓஐசி.யின் மாலத்தீவு நிரந்தர உறுப்பினர் தில்மீஸா உசைன் பேசியதாவது:
தெற்காசியாவில் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் மாலத்தீவு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் இஸ்லாமோபோபியா என்ற குற்றச்சாட்டு உண்மையானதல்ல. உண்மை என்னவென்பதே தெரியாமல், ஒரு குறிப்பிட்ட நாட்டின்மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியானதல்ல. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்த நாடு. 200 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் நாடு. எனவே, இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது.
இனவெறி அல்லது மதவெறி எதுவாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அல்லது வேறு எந்த வகையில் இருந்தாலும் அதை மாலத்தீவு கடுமையாக எதிர்க்கிறது. அதேநேரத்தில், இந்தியாவில் இஸ்லாம் மதம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. இந்தியாவில் 2-வது மிகப்பெரிய மதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.
எனவே, இந்தியாவுக்கு எதிராக உள்நோக்கத்துடன், தவறான செய்திகளைப் பரப்புவதை மாலத்தீவு ஏற்றுக் கொள்ளாது. சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகள், இந்தியாவின் 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது.
இவ்வாறு மாலத்தீவு பிரதிநிதி உசைன் திட்டவட்டமாகக் கூறினார்.
அத்துடன், 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவுக்கு ஆதரவாக மேலும் சில நாடுகள் குரல் கொடுத்துள்ளன. இதனால் பாகிஸ்தான், துருக்கி உட்பட ஓஐசி.யில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகள், இந்தியாவின் 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT