Published : 23 May 2020 04:58 PM
Last Updated : 23 May 2020 04:58 PM
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜகவிடம் பறிகொடுத்த தம் ஆட்சியை மீட்க காங்கிரஸ் வியூகம் அமைக்கிறது. இங்கு வரவிருக்கும் 24 தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரஷாந்த் கிஷோருக்கு பிரச்சாரப் பொறுப்பு அளித்துள்ளது.
தொடர்ந்து மூன்று முறை பாஜக ஆட்சி செய்த மபியில் கடந்த 2018 ஆம் வருட இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், அதிக தொகுதிகளை பெற்றாலும் காங்கிரஸுக்கு ஒரிரு எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது.
இதை சுயேச்சை மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜிடம் பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். இதன் 15 மாத ஆட்சிக்கும் பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜோதிர்ஆதித்ய சிந்தியா காங்கிரஸின் 22 எம்எல்ஏக்களுடன் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இதனால், தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது எனக் கருதி கடந்த பிப்ரவரியில் முதல்வர் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு பாஜகவின் முதல்வராக சிவ்ராஜ்சிங் சவுகான் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸின் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருந்துடன் இருவர் மரணம் அடைந்தனர். எனவே, மபியின் 24 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் வென்று மீண்டும் தன் ஆட்சியை மீட்க காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகிறது. இந்தவகையில், 2018 சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரப்பணி செய்த தேர்தல் நிபுணரான பிரஷாந்த் கிஷோரையே மீண்டும் அமர்த்தி உள்ளது.
இவர் முதல்கட்டமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பெறும் ஆதரவு பெற்ற சம்பல் பகுதியின் தொகுதிகளை குறி
வைத்துள்ளார். இதற்காக அங்கு அமைந்துள்ள குவாலியரில் முதல் தேர்தல் அலுவலகம் அமைத்து பணியை துவக்கி உள்ளார்.
விரைவில் அறிவிக்கப்பட உள்ள இந்த இடைத்தேர்தலின் அனைத்து தொகுதிகளையும் வென்றால் தான் காங்கிரஸால் ஆட்சியை மீட்க முடியும். எனவே, பிரஷாந்த் கிஷோர் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் தன் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது.
இதில், காங்கிரஸ் சார்பில் சில முன்னாள் எம்.பிக்களும் களம் இறக்கப்பட உள்ளனர். ராகுல் காந்தியின் அபிமானம் பெற்றவரும் மபிவாழ் தமிழருமான மீனாட்சி நடராஜன் முன்னாள் எம்.பியை சுவஸ்ரா தொகுதியில் நிறுத்த திட்டமிடுகிறது.
பிரஷாந்த் கிஷோரின் மற்றொரு முக்கிய ஆலோசனையையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுள்ளார். இதன்படி, நேற்று முன் தினம் தன் 11 மாவட்டங்களில் நிர்வாகிகள் அனைவரையும் புதிதாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
கமல்நாத்-திக்விஜய் கோஷ்டி மோதல்
இதனிடையே, காங்கிரஸின் கோஷ்டி பூசல் முடிவிற்கு வந்தபாடில்லை. சட்டப்பேரவை தேர்தலில் மூத்த தலைவரான கமல்நாத்துடன் மோதிக்கொண்டிருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்து விட்டார்.
எனினும், தற்போது கமல்நாத் மற்றும் மபியின் முன்னாள் காங்கிரஸ் முதல்வரான திக்விஜய்சிங் ஆகியோருக்கு இடையே கோஷ்டி மோதல் துவங்கி உள்ளது. இதை சரி செய்தால் தான் இடைத்தேர்தலில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகும் என பிரஷாந்த் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT