Published : 23 May 2020 12:37 PM
Last Updated : 23 May 2020 12:37 PM
மத்திய பிரதேச மாநிலம் பீதுல் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயரதிகாரிக்கும் மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கறிஞர் ஒருவரை தாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து அடித்ததாகக் கூறிய போலீஸ் தற்போது அந்த சம்பவத்தையே மறுத்துள்ளது.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, தேசம் முழுதும் லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முந்தைய காலக்கட்டமான மார்ச் 23ம் தேதியன்று தீபக் பந்தீல் என்ற வழக்கறிஞர், (இவர் சர்க்கரை நோயாளியும்கூட) மருத்துவமனைக்கு செக்-அப் காரணமாகச் சென்றார். அப்போது கண்டிப்பான தடைகள் இல்லை. ஆனாலும் பந்தீலை அடித்து நொறுக்கினர். அவர் காதிலிருந்து ரத்தம் வர, சிராய்ப்புக் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவ-சட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இதற்கிடையே புதனன்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த பீதுல் போலீஸ் அதிகாரி வழக்கறிஞரை அடிக்கவே இல்லை என்று மறுத்தார். மேலும் அதற்கான சாட்சியங்களே இல்லை என்றார். மேலும் ஆர்டிஐ சட்டப்படி வழக்கறிஞர் சம்பவ இடத்தின் சிசிடிவி பதிவுகளைக் கேட்டார், ஆனால் போலீஸ் கொடுக்கவில்லை. அதாவது அவர் எதற்காகக் கேட்கிறார் என்ற காரணத்தைக் கூறவில்லை என்பதற்காக ஆர்டிஐ தகவலை மறுத்ததாகத் தெரிவித்தனர்.
ஆனால் தி இந்து மே 17ம் தேதி வழக்கறிஞர் பந்தீலிடமிருந்து விவகாரம் குறித்துக் கேட்கச் சென்ற போது அப்போது போலீஸார் தி இந்துவிடம் “அவர் முஸ்லிம் போல் இருந்தார், நீள தாடி வைத்திருந்தார். குழப்பம்தான், சில வேளைகளில் இப்படி நடப்பதுண்டு. இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம். ஆனால் அவர் கேட்கவில்லை, புகார் அறிக்கை தயாரித்தார்” என்றனர்.
மேலும் போலீஸுடன் நடந்த உரையாடல் ஒன்றை வழக்கறிஞர் பதிவு செய்தார், அதில், ‘எப்போதெல்லாம் இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் போலீஸ் இந்துக்கள் பக்கமே நிற்கிறது. முஸ்லிம்களுக்கும் இது தெரியும். இந்தச் சம்பவம் நடந்தது, இது தவறு, எங்களிடம் வேறு வார்த்தைகள் இல்லை’ என்று ஒருவர் கூறியது பதிவாகியுள்ளது. இதைக்கூறிய போலீஸ் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர்களிடம் வழக்கறிஞர் பந்தீல் கேட்டார், ‘ஆகவே நான் முஸ்லிம் என்று நினைத்து அடித்தீர்கள் இல்லையா? அதற்கு போலீஸார் ஒருவர், ஆம் உங்கள் தாடி நீளமாக இருந்தது’ என்று கூறியதும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
மேலும் வக்கீல் பந்தீலை போலீஸார் வழக்கை வாபஸ் வாங்குமாறு கெஞ்சிய போது, ‘புகார் வேண்டாம், பிளீஸ் கேளுங்கள், இது காந்தி தேசம், நாமெல்லோரும் காந்திஜியின் குழந்தைகள், நீங்கள் வேறு ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என்று தவறாக நினைத்து விட்டார்கள். இது தவறுதான்’ என்று கெஞ்சியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT