Published : 23 May 2020 07:50 AM
Last Updated : 23 May 2020 07:50 AM
கரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில் கரோனா தொற்று குறைவாக இருப்பதால், 4-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதன்படி மாவட்ட மற்றும் புறநகர் ரயில்களை இயக்கவும் முதல்வர் எடியூரப்பா அனுமதி அளித்தார்.
அதன்பேரில் நேற்று பெங்களூரு-மைசூரு, பெங்களூரு - ஹூப்ளி-பெலகாவி இடையேயான பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு, மைசூரு,ஹூப்ளி, பெலகாவி ஆகிய ரயில்நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப் பிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நேற்று காலையில் 9.20 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு நோக்கி ரயில் புறப்பட்டு சென்றது. மறுமார்க்கமாக பிற்பகல் 1.45 மணிக்கு மைசூருவில் புறப்பட்ட அந்த ரயில் மாலை 5 மணிக்கு பெங்களூருவை வந்ததடைந்தது. இதேபோல பெங்களூரு - ஹூப்ளி-பெலகாவி இடையே அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டது. சரியாக இரு மாதங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT