Published : 22 May 2020 08:51 AM
Last Updated : 22 May 2020 08:51 AM
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் 2-வது கட்டம் வரும் ஜூன் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
2-வது கட்டவந்தே பாரத் மிஷன் திட்டம் கடந்த 16-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி(இன்று)முடிவதாக இருந்த நிலையில் அது ஜூன் 13-ம் ேததிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் 18 நாடுகளில் இருந்து மட்டுமே இந்தியர்களை அழைத்துவர 2-வது கட்டத்தில் திட்டமிட்டிருந்த நிலையில் அது 47 நாடுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடல் மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் ேததிவரை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் மூலம் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பிலி்ப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.
இந்நிலையில் 2-வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் கடந்த 16-ம்தேதி தொடங்கி 22-ம் தேதி(இன்று) வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 18 நாடுகளில் இருந்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த 2-ம் கட்ட மீட்புப்பணியில் இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான், நைஜிரியா, கஜகஸ்தான், உக்ரைன், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், ஆர்மீனியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து 32ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளார்கள்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2-வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் வரும் ஜூன் 13-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பிராங்பர்ட் விமானநிலையத்தை மையமாக வைத்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல்வரை 23 ஆயிரத்து 475 இந்தியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். 3-வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் ஜூன் 13ம் தேதி தொடங்கும் இதில் தனியார் விமானங்களும் பங்கேற்கின்றன.
2வது கட்ட வந்தே பாரத் மிஷனில் மொத்தம் 47 நாடுகளில் இருந்து 162 விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இஸ்தான்புல், ஹோ சி மின் நகரம், லாகோஸ், ஆகிய நகரங்களுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகமான விமானங்களை இயக்க இருக்கிறோம்.
அர்ஜென்டீனா, தென் ஆப்பிரிக்கா, பெரு, மங்கோலியா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். பியூனோஸ் அயர்ஸ் நகரிலிருந்து வியாழன் காலை 62 இந்தியர்கள் வந்துள்ளனர்.
98 நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப 2.59 லட்சம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் பணி சிக்கலானது, குழப்பமானது என்றாலும் அதை மத்தியஅரசு சிறப்பாகச் செய்து வருகிறது. அனைத்து நாடுகளின் அரசுகளுடன் சுமூக உறவு இருப்பதால், இந்தியர்களை அழைத்துவரும் பணியில் வெளியுறவுத்துறை, சுகாதாரத்துறை, உள்துறை, விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை ஆகிய இணைந்து, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT