Published : 21 May 2020 05:21 PM
Last Updated : 21 May 2020 05:21 PM

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு மத்திய குழு: புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை

புதுடெல்லி

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் குழுக்களை அனுப்பவுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டத்துக்கு, அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமை தாங்கினார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரத்தை மாநிலங்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அமைச்சகங்களுடன் இணைந்து தேசிய நெருக்கடி மேலாண்மை குழு ஆய்வு செய்தது.

இந்திய வானிலை மையம் சரியான நேரத்தில் துல்லியமான முன்னெச்சரிக்கை விடுத்தது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்கூட்டியே அனுப்பப்பட்டது ஆகியவை, மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்களையும், ஒடிசாவில் 2 லட்சம் பேரையும், அப்புறப்படுத்த உதவியது என ஒடிசா மற்றும் மேற்குவங்க தலைமை செயலர்கள் தெரிவித்தனர். இதனால் மிகக் குறைந்த உயிரிழப்பு ஏற்பட்டது. ஒடிசாவில் கடந்த 1999ம் ஆண்டு தாக்கிய அதி தீவிர புயலில் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. உம்-பன் புயல் இதற்கு அடுத்த நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில், குறிப்பாக கொல்கத்தாவில் மீட்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை கூடுதல் குழுக்களை அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் உணவு தானியங்கள், குறிப்பாக அரிசி போதிய அளவில் கிடைப்பதை இந்திய உணவுக் கழகம் (FCI) உறுதி செய்யும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேற்கு வங்கம், ஒடிசாவில் மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவை மீண்டும் கிடைக்க மின்துறை அமைச்சகம் மற்றும் தொலை தொடர்புத்துறை உதவும். பெரும் பாதிப்பை சந்தித்த ரயில்வேத்துறை, தனது சேவைகளை விரைவில் தொடங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் விவசாயம், மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்கம் தெரிவித்துள்ளது. விவசாயம் பாதித்துள்ளதாக ஒடிசா தெரிவித்துள்ளது.

மீட்டு மற்றும் நிவாரண முயற்சிகளை ஆய்வு செய்த அமைச்சரவை செயலாளர், ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகளுடன் மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் குழுக்களை அனுப்பவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x