Published : 21 May 2020 05:12 PM
Last Updated : 21 May 2020 05:12 PM

வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவரிடம் காணொலி காட்சி மூலம் ஆதாரச் சான்று வழங்கிய வெளிநாட்டு தூதர்கள்

புதுடெல்லி

7 நாடுகளின் தூதர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஆதாரச் சான்றுகளை வழங்கினர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக காணொலிக் காட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் வழக்கமாக குடியரசுத் தலைவரை சந்தித்து தாங்கள் சார்ந்துள்ள நாட்டின் தூதர் என்பதற்கான ஆதாரத்தை அளிப்பர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார்.

ஆனால் கரோனா காரணமாக 7 நாடுகளின் தூதர்கள் காணொலிக் காட்சி மூலம், குடியரத் தலைவரிடம் ஆதாரச் சான்றுகளை இன்று வழங்கினர். வடகொரியா, செனகல், டிரினிடாட் மற்றும் டபாகோ, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, கோட் டி‘இவோரி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் துணைத் தூதர்கள் காணொலி காட்சி மூலம் இன்று வழங்கிய ஆதாரச் சான்றுகளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

வெளிநாட்டு தூதர்கள் டிஜிட்டல் முறையில் தங்கள் ஆதாரச் சான்றுகளை சமர்ப்பித்தது, குடியரசுத் தலைவர் மாளிகையின் வரலாற்றில் இதுவே முதல் முறை.

கோவிட்-19 சவால்களை வெற்றி கொண்டு, உலகம் தனது செயல்பாடுகளை புதுமையான முறையில் தொடர்ந்து மேற்கொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவியுள்ளதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதர்களிடம் டிஜிட்டல் வடிவிலான ஆதாரச் சான்றுகளை பெறும் விழா நடைபெற்ற, நாளான இன்று மிகவும் சிறப்பான நாள் என்றார். இந்திய மக்கள் மற்றும் உலகத்தின் முன்னேற்றத்துக்கு டிஜிட்டல் வழியை எல்லையின்றி விரிவுபடுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது’’ என அவர் குறிப்பிட்டார்.
தூதர்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கோவிந்த், ‘‘கோவிட்-19 தொற்று உலக சமுதாயத்துக்கு இதுவரை இல்லாத சவாலை ஏற்படுத்தியுள்ளது எனவும், இந்த நெருக்கடி உலக நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளது எனவும் கூறினார். பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில், இதர நாடுகளுக்கு ஆதரவு அளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளதாக’’ அவர் குறிப்பிட்டார்.
ஆதாரச் சான்றுகளை வழங்கிய தூதர்கள் / துணை தூதர்கள்:-
1. சோ ஹூய் சோல், வடகொரிய தூதர்.
2. அப்துல் வஹாப் ஹைதரா, செனகல் குடியரசு தூதர்.
3. ரோஜர் கோபால், டிரினாட் அண்ட் டெபாகோ குடியரசு துணைத் தூதர்,
4. சாந்தி பாய் ஹனுமான்ஜி, மொரிசீயஸ் துணைத் தூதர்.
5. பேரி ராபர்ட் ஓ‘ பரல், ஆஸ்திரேலிய துணைத் தூதர்.
6. எம்.என்‘டிரை எரிக் கேமிலி, கோடி டி‘இவோரி குடியரசு தூதர்.
7. ஜாக்குலின் முகாங்கிரா, ருவாண்டா குடியரசு தூதர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x