Published : 21 May 2020 04:46 PM
Last Updated : 21 May 2020 04:46 PM
பிஎம் கேர்ஸ் நிதி குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்திலிருந்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக புகார் செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கர்டநாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவமோகா மாவட்டம், சகாரா நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கே.வி. பிரவீண் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகார்தாரர் கே.வி.பிரவீண் கூறுகையில், “கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்தில், ''கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிஎம் கேர்ஸ் நிதிக்காக வழங்கப்பட்ட நிதியை பிரதமர் மோடி தவறாகப் பபயன்படுத்துகிறார்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்கள் மத்தியில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் காங்கிரஸ் ஏற்படுத்துகிறது. ஆதலால், காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சிவமோகா மாவட்டம், சகாரா நகரில் உள்ள போலீஸார் ஐசிபி பிரிவு 505 (1)பி 153 பிரிவு ஆகியவற்றின் கீழ் மக்களைத் தூண்டிவிடுதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராகக் குற்றம் இழைக்கத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் அகர்வால் கூறுகையில், “ஆளும் அரசைக் கேள்வி கேட்பது என்பது எதிர்க்கட்சியின் பணி, பொறுப்பு.
ஆனால், எதிர்க்கட்சிகளைச் செயல்படவிடாமல் அதன் குரல்களை மத்திய அரசு நெரிக்கிறது. அதேசமயம், ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும்போது பிஎம் கேர்ஸ் நிதி தேவையில்லை எனும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT