Published : 20 May 2020 04:45 PM
Last Updated : 20 May 2020 04:45 PM

உம்பன் புயல்; கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும்- கொல்கத்தா வரை பலத்த காற்று: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கொல்கத்தா

மேற்குவங்க மாநிலத்தில் புகழ் பெற்ற சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட சுந்தர்பான் பகுதியில் உம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கொல்கத்தா வரையில் கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது. கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. இன்று நண்பகல் நிலவரப்படி வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் காற்று இப்போது வடக்கு- வடகிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் இருந்தது.

இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் உள்ளது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு – தென்கிழக்கில் இருந்தது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்) இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உம்பன் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கொல்கத்தா வரையில் கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக உள்ளது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரக்கூடும் என தெரிகிறது. ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசி வருகிறது.

ஒடிசாவின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக கன மழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x