Published : 20 May 2020 03:57 PM
Last Updated : 20 May 2020 03:57 PM
பிரதமரின் கிராம சாலை திட்டம்-3-ன் கீழ் கிராமங்களில் சாலைகள் அமைக்க கயிறு துணி பயன்படுத்தப்படும் என மத்திய அரசின் கிராம மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்டும் தேசிய ஊரக கட்டமைப்பு வளர்ச்சி முகமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ‘‘சாலைகள் போடுவதில் கயிறு துணியை பயன்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுள்ளதால், இது மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இந்த முடிவு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான நேரத்தில் கயிறு தொழிலை ஊக்குவிக்கும்’’ என்று கூறினார்.
பிரதமரின் கிராம சாலைத் திட்ட புதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் படி, ஒவ்வொரு சாலைத் திட்டத்திலும் 15% சதவீத நீளத்தில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இவற்றில் 5 சதவீத தூரத்திற்கான சாலைகளை, இந்திய சாலைகள் அமைப்பு(ஐஆர்சி) அங்கீகாரம் வழங்கிய கயிறு துணிகளால் அமைக்கப்படும்.
தென்னை நார் கயிறு மூலம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் துணி வலுவானதாகவும், நீண்ட காலம் உழைக்க கூடியதாகவும், நுண்கிருமி தொற்று இல்லாததாகவும் உள்ளது. கிராம சாலைகள் அமைப்பதற்கு இந்த கயிறு துணி மிகச் சிறந்த பொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள்படி, பிரதமரின் கிராம சாலைத் திட்டம்-3ன் கீழ் அமைக்கப்படும் கிராம சாலைகளில் 5% சதவீத தூரம் கயிறு துணி மூலம் அமைக்கப்படும். இதன் அடிப்படையில் ஆந்திராவில் 164 கி.மீ, குஜராத்தி்ல 151 கி.மீ, கேரளாவில் 71 கி.மீ, மகாராஷ்டிராவில் 328 கி.மீ, ஒடிசாவில் 470 கி.மீ, தமிழகத்தில் 369 கி.மீ, தெலங்கானாவில் 121 கி.மீ தூரத்துக்கும் கயிறு துணி மூலம் ரோடுகள் அமைக்கப்படும். மொத்தம் 7 மாநிலங்களில் 1674 கி.மீ தூரத்துக்கு கயிறு துணிகள் மூலம் சாலைகள் அமைக்கப்படும். இதற்கு ஒரு கோடி சதுர மீட்டர் கயிறு துணிகள் தேவைப்படும்.
இவற்றின் விலை ரூ.70 கோடி வரை வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவு நாட்டில் கயிறு துணி தயாரிப்புக்கு மிகப் பெரிய சந்தையை உருவாக்கும். கோவிட்-19 ஆல் பாதிக்கப்ட்ட கயிறு தொழிலுக்கு ஒரு வரமாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT