Published : 20 May 2020 07:04 AM
Last Updated : 20 May 2020 07:04 AM
ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவுக்காக செலவிட்டு வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் ஆட்டோ டிரைவராக பணியாற்றுபவர் அக் ஷய் கொத்தவால் (30). இவருக்கு மே 25-ம்தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. கரோனா ஊரடங்கு காலத்தில் திருமணத்தை நடத்துவது பொருத்தமற்றது என்று கருதிய அக் ஷய், தனது வருங்கால மனைவியுடன் பேசி, திருமணத்தை தள்ளிவைத்தார். மேலும் நண்பர்களின் உதவியுடன், தனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து தினமும் 400 பேருக்கு உணவு தயாரிக்கிறார். அவற்றை தங்கள் பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு விநியோகிக்கிறார்.
இதுகுறித்து அக் ஷய் கூறும்போது, “ஒருவேளை உணவுகூட சாப்பிட முடியாமல் தெருக்களில் தவிப்பவர்களை நான் பார்த்து வேதனை அடைந்தேன். பிறகு நானும் எனது நண்பர்களும் இவர்களுக்கு உதவ முடிவு செய்தோம். அப்போது எனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை இதற்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். உடனே சமையல் அறை ஏற்படுத்தி அங்கு சப்பாத்தியும் சப்ஜியும் தயாரிக்கத் தொடங்கினோம். பிறகு அவற்றை எனது ஆட்டோவிலேயே எடுத்துச் சென்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு விநியோகித்து வருகிறோம்” என்றார்.
அக் ஷய், மேலும் சில நற்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களை தனது ஆட்டோவில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என புனே நகர தெருக்களில் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT