Published : 18 May 2020 03:01 PM
Last Updated : 18 May 2020 03:01 PM
மதமாநாடால் சிக்கிய 700 தப்லீக் ஜமாத்தினர் உள்ளிட்ட 1153 தமிழர்களுடன் மே 16 இல் கிளம்பிய ரயில் இன்று திருச்சி சேர்ந்தது. இதில் தமது உணவை அனைவருக்கும் பகிர்ந்த ஜமாத்தினரால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேசிய அளவில் மத்திய அரசு ஊரடங்கை அமலாக்கி உள்ளது. இதனால், தப்லீக்-எ-ஜமாத்தின் மதநாட்டிற்கு வந்த 700 உள்ளிட்ட தமிழர்கள் பலரும் டெல்லியில் சிக்கினர்.
இவர்கள் தமிழகம் திரும்புவதற்கான முதல் ரயில் மே 16 மதியம் 3.15 மணிக்கு பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. டெல்லியின் 24 கரோனா முகாம்களில் இருந்த 700 தப்லீக் ஜமாத்தினரும், பிறஇடங்களில் இருந்த 453 பொதுமக்களும் இதில் பயணித்தனர்.
இவர்களுக்கு டெல்லியின் ஜமாத்-எ-உலாமா அமைப்பின் சார்பில் பிரட், பிஸ்கட், குடிநீர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. இவை ரமலான் நோன்புடன் செல்லும் ஜமாத்தினருக்கு அதை மாலையில் முடிக்க உதவ அளிக்கப்பட்டது.
எனினும், இது சிறப்பு ரயில் என்பதால், பயணிகள் உணவிற்கான வகையில் ’பேண்ட்ரி கார்’ வசதி இல்லை. இதனால், தம்மிடம் இருந்த உணவுப்பொருட்களை தமிழக தப்லீக்கினர் தம் சகபயணிகள் அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர்.
இது குறித்து ‘‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் சிறப்பு ரயிலின் எஸ்-10 பயணியும் உளுந்தூர்பேட்டைவாசியுமான ராம்குமார் கூறும்போது, ‘வழியில் ஆந்திரா அரசால் மட்டுமே அளிக்கப்பட்ட உணவு எங்களுக்கு போதவில்லை.
பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகளால் அளிக்கப்பட்ட உணவை ஜமாத்தினர் அனைவருக்கும் பகிர்ந்தளித்து உதவியது நெகிழ்வாக இருந்தது. ஜாதி,மதபேதமின்றி தமிழர்களுக்கு இடையிலான இந்த ஒற்றுமை வளர்ந்து ஓங்க வேண்டும்.’’ எனத் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து கிளம்பிய ரயிலுக்கு தமிழகம் வரை வழியில் எங்கும் நிற்க அனுமதியில்லை. உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்காக மட்டும் சில ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது.
முதலாவதாக ஜான்சி ரயில் நிலையத்தில் நின்ற போது அங்குள்ள இஸ்லாமிய அமைப்பால் ரயில் நிலைய அனுமதியுடன் அனைவருக்கும் உணவுப் பொட்டலங்கள் அளிக்கப்பட்டன. இந்த அனுமதி அடுத்து வந்த மத்தியப்பிரதேசத்தின் போபாலில் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்தது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தமிழக தப்லீக்கை சேர்ந்தவரான தஸ்லீம் கூறும்போது, ‘போபாலில் உணவு வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும் அங்கு சிக்னலுக்காக சிறிது நேரம் ரயில் நின்றது.
அப்போது, வழியில் நின்று போபாலின் தப்லீக்கினர் சஹர் நோன்பிற்கான உணவுப்பொட்டலங்கள், பழங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை ரயிலின் உள்ளே வீசி எறிந்து உதவினர். அதை உடனிருந்தப் பிறபயணிகளுக்கும் பகிர்ந்து அளித்து மகிழ்ந்தோம்.’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, பலார்ஷா, விஜயவாடா மற்றும் நெல்லூர் ரயில் நிலையங்களிலும் நீர்நிரப்பவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் நிறுத்தப்பட்டது. அப்போது, மகராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் மூலமாகவும் பயணிகளுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
முகாம்களில் தமிழக தப்லீக்கினர்
நேற்று இரவு சென்னை தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்த ரயிலில் 214, இன்று விடியலில் திருச்சியில் 312 மற்றும் திருநெல்வேலியில் 70 தப்லீக்கினர் இறங்கியுள்ளனர். அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையினரை முகம்மது சதக் கல்வி நிறுவனங்களிலும், தப்லீக்-ஜமாத்தின் தமிழகக் கிளைத் தலைமையகத்தில் திருச்சியினரும் வைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் இறங்கியவர்கள் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT