Published : 18 May 2020 07:52 AM
Last Updated : 18 May 2020 07:52 AM

ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் தயார் நிலையில் 17 என்டிஆர்எப் குழுக்கள்

வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் ஒடிசா, மேற்கு வங்கத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஒடிசா மாநிலம் புரி கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதைத் தடுப்பதற்காக போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவில் 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் (என்டிஆர்எப்) தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து என்டிஆர்எப் தலைமை இயக்குநர் என்.என்.பிரதான் நேற்று கூறியதாவது:

வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதால் மேற்கு வங்கம், ஒடிசாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்திய வானிலை மையத்திடமிருந்து எங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்து வருகின்றன. தற்போது மேற்கு வங்கம், ஒடிசாவில் 17 என்டிஆர்எப் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒடிசாவின் புரி, ஜெகத்சிங்பூர், கேந்திரபரா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா, வடக்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாபூர், மேற்கு மிட்னாபூர், ஹவுரா, ஹூக்ளி பகுதிகளிலும் என்டிஆர்எப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 45 வீரர்கள் உள்ளனர்.

புயல் உருவானதையொட்டி என்டிஆர்எப் வீரர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தப் புயல் அநேகமாக மேற்கு வங்கம், சாகர் தீவுகள், வங்கதேசம் வழியாக கரையைக் கடக்கலாம் எனத் தெரிகிறது.

புயல் கரையைக் கடந்த பின்னர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக குழுக்களுக்கு தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x