கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு காரணமாக நிறுவனங்களுக்கு எதிரான திவால் சட்ட நடவடிக்கை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். சுயசார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகளின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 650 கோடியாகும். முதல் கட்டமாக நிர்மலா சீதாராமன் ரூ 5 லட்சத்து 94 ஆயிரத்து 550 கோடிக்குத் திட்டங்களை அறிவித்தார். 2-வது கட்டமாக ரூ 3 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கும், 3-வது கட்டமாக ரூ.1.50 லட்சம் கோடிக்கும், 4-வது மற்றும் 5-வது கட்டமாக ரூ.48 ஆயிரத்து 100 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
தொழில் செய்வதை எளிதாக்குதல் பிரிவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சம்ங்கள்:
திவால் நடவடிக்கையைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் காக்கப்படும்.
திவால் சட்டம் பிரிவு 240ன்படி, நடுத்தர, சிறு நிறுவனங்களுக்கான திவால் நடவடிக்கை விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு காரணமாக அடுத்த ஓராண்டுக்கு திவால் நடவடிக்கைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கரோனா வைரஸ் லாக்டவுனால் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அதை வேண்டுமென்றே கடனைச் செலுத்தாத பட்டியலிலும் , திவால் நடவடிக்கையிலும் சேர்க்கக்கூடாது.
கரோனா பாதிப்பிலிருந்து மீளக் கடன் பெறுவது, கடனைத் திருப்பிச் செலுத்தாதது, விலக்கு அளிப்பது ஆகியவற்றை முடிவு செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம்.
கம்பெனிச் சட்டத்தில் இருக்கும் சிறிய, நடைமுறைரீதியிலான குறைபாடுகள் குற்றப்பிரிவிலிருந்து நீக்கப்படும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகக் கடமை அறிக்கை அளித்தல், நிறுவன இயக்குநர்கள் அறிக்கை தாக்கல் செய்தலில் காலதாமதம், தாக்கல் செய்வதில் குறைபாடுகள், ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடத்துவதில் தாமதம் ஆகியவை குற்றப்பிரிவிலிருந்து நீக்கப்படுகின்றன.
ஒத்திசைவுடன் பேசித் தீர்க்கக்கூடிய பெருவாரியான குற்றங்கள் உட்புற செயல்முறை தீரப்புக்கு மாற்றப்படும். ஒத்திசைவுடன் தீர்க்கக்கூடிய விவகாரங்களில் பிராந்திய இயக்குநர்களின் அதிகாரம் அதிகரிப்பு.
ஒத்திசைவுடன் தீர்க்கக்கூடிய 7 குற்றப்பிரிவுகள் கைவிடப்படுகின்றன. 5 பிரிவுகள் மட்டுமே கையாளப்படும்.
WRITE A COMMENT