Published : 17 May 2020 12:57 PM
Last Updated : 17 May 2020 12:57 PM
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்தக் கிராமத்துக்குச் சென்றால் அவர்களுக்கு வேலை வழங்கும் விதமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். கடந்த புதன்கிழமை முதல் ரூ.20 கோடிக்கான சுயசார்பு பொருளாதாரத்துக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
இன்று 5-வது மற்றும் இறுதிக்கட்ட பொருளாதார மீட்புத் திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள், கரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அவர் பேசியதாவது:
சர்வதேச அளவிலான இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள், கம்பெனிச் சட்டத்தில் கிரிமினல் பிரிவை நீக்குதல், எளிதாக தொழில் செய்தல் ஆகிய பிரிவுகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
கரோனா பேரிடர் காலத்தில் மத்திய, மாநில அரசுகளுடன், உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஏழைகளுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு சேர்த்த மாநில அரசுகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் 8.19 விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.16,394 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் முதல் தவணையாக ரூ.1,405 கோடியும், 2-வது தவணையாக ரூ.1,402 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களுக்கான ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரத்து 25 கோடியும், ஏழைகளுக்கு உஜ்வாலா திட்டத்தின் மூலம் 6.81 கோடி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு அந்தப் பயணத்திற்கான 85 சதவீதச் செலவை மத்திய அரசு ஏற்றுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகளுக்கு இதுவரை 15,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு ரூ.4,113 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
2.2 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.3,950 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 12 லட்சம் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெற்றுள்ளனர்.
கரோனா நோயைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ரூ.15,000 கோடி மத்திய சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா தொடர்பான ஆய்வகங்களை அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அவர்களுக்குச் சொந்த கிராமங்களில் வேலை வழங்கும் வகையில் மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி வழங்கப்படும். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் இதற்கக ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி என மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT