Published : 17 May 2020 06:50 AM
Last Updated : 17 May 2020 06:50 AM
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான வழக்கில் சிபிஐ அதிகாரி சுமன் குமார், தனி ஒரு ஆளாக வெற்றி கண்டுள்ளார். இந்த வழக்கில் விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்டு 28 நாட்களில் அவரை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றி இந்தியா அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பியோடினார். கிங் ஃபிஷர் ஊழியர்கள் சம்பளம் தரவில்லை எனப் போராட்டம் நடத்தினர். நாளுக்கு நாள் மேலும் பிரச்சினைகள் அதிகரித்தன. ஆனாலும் விஜய் மல்லையா மீது வங்கிகள் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
பின்னர் சிபிஐ தானாகவே முன்வந்து ஆதாரங்களின் அடிப்படையில் விஜய் மல்லையா மீது ஐடிபிஐ வங்கியில் அவர் ரூ.900 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கைப் பதிவு செய்தது. பின்னர் வங்கிகள் கூட்டமைப்பின் தலைமை வங்கியான எஸ்பிஐ மூலம் ரூ.9,000 கோடி கடன்வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜய் மல்லையாவை லண்டனில் இருந்து இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராக தனி ஆளாக சிபிஐ சார்பில் விசாரணையில் ஈடுபட்டவர் சுமன் குமார். இதற்காக எண்ணிலடங்கா முறை லண்டனுக்குச் சென்று வந்திருக்கிறார்.
55 வயதாகும் இவர் தற்போது சிபிஐகூடுதல் காவல் ஆணையராக இருக்கிறார்.இவர் 23 வயதில் துணை காவல் ஆய்வாளராகப் பணியைத் தொடங்கினார். இவர் தனது திறம்மிக்க பணிக்காக குடியரசுத் தலைவர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2015-ல் மல்லையா வழக்கில் இவர் ஈடுபடுகிறார். 2016-ல் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து லண்டனுக்குத் தப்பிவிடுகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, வழக்கை மேலும் சிக்கலாக்கியது.
லண்டன் நீதிமன்றங்களில் போராடி அவரை இந்தியா கொண்டுவர வேண்டியசூழல் உண்டானது. கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும், சுமன் குமாரும் இணைந்து இந்த வழக்கு விசாரணையை நடத்தினர். தொடர்ந்து லண்டனுக்குச் சென்று எந்தவொரு நீதிமன்ற விசாரணையையும் தவிர்த்து விடாமல் கண்ணும் கருத்துமாக வழக்கை நடத்தினார். ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்கை வென்று ஒருவரை அங்கிருந்து வேறு நாட்டுக்குக் கொண்டுவருவது என்பது சாதாரண காரியமல்ல. வழக்கை முடிப்பதற்கான அனைத்து தேவையான முயற்சிகளையும் கடுமையாக மேற்கொண்டனர்.
மல்லையா மீதான மோசடி வழக்கு எந்த வகையிலும் நீர்த்துப் போகாத அளவுக்கு அதேசமயம் இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியிலும் தோற்றுவிடாத அளவுக்கு வழக்கில் சுமன் குமார்தீவிரமாக ஈடுபட்டார். மல்லையா வழக்கில் சுமன் குமாரின் விசாரணை வாதங்கள் வலிமையாக நின்றன. அதன்பிறகே மல்லையாவின் மேல்முறையீடு மனுவை ரத்து செய்தது நீதிமன்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT