Published : 16 May 2020 02:54 PM
Last Updated : 16 May 2020 02:54 PM
மத்திய அரசு வட்டிக்குக் கடன் கொடுப்பவர் போல் நடந்துகொள்வதை நிறுத்திவிட்டு, ஏழைகளுக்கு நேரடியாகப் பணத்தை வழங்க வேண்டும். பிரதமர் மோடி தனது பொருளாதார மீட்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டை மீட்க ரூ.20 லட்சம் கோடியில் தற்சார்பு பொருளாதாரத்தை மையமாக வைத்து பொருளாதார மீட்புத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல லட்சம் கோடிகளில் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து வருகிறார்.
ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் அது நேரடியாக அவர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் கைகளில் நேரடியாக பணத்தைக் கொடுத்தால்தான் பொருளாதாரம் சுழலும் எனப் பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காணொலி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மத்திய அரசு வட்டிக்குக் கடன் கொடுப்பவர் போல் நடந்து கொள்ளாமல் ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாக கைகளில் பணத்தை வழங்கிட வேண்டும். அதிலும் ஏழை மக்கள் செலவு செய்யும் வகையில் பணத்தை நேரடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் நேரடியாக பணத்தை மத்திய அரசு வழங்காதவரை பொருளாதாரச் சக்கரம் சுழலாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போதே மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், காலம் தாழ்த்தக்கூடாது. காலம் தாழ்த்தினால், மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தைச் செலுத்தாவிட்டால் பேரழிவான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் இல்லாமல் உணவு இல்லாமல் சொந்த மாநிலத்துக்கும், ஊர்களுக்கும் நடந்து செல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த நியாய் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாகச் செயல்படுத்த வேண்டாம். தற்காலிகமாகச் செயல்படுத்தி மக்களுக்கு நேரடியாகப் பணத்தை வழங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்
பிரதமர் மோடி தான் அறிவித்த ரூ.20 கோடி திட்டங்களை மறு ஆய்வு செய்து, ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் நேரடியாகப் பணத்தை வழங்க உறுதி செய்ய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்துங்கள், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் வழங்கிடுங்கள். இவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். இதைச் செய்ய நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பொருளாதாரத்தில் மிகப்பெரிய புயல் உருவாகி வருகிறது. அந்தப் புயல் தீவிரமடையும் போது, பெரும் சேதங்களை ஏற்படுத்தும், ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை, நுகர்வு சக்தி மிகவும் முக்கியம். இவை இரண்டும் இல்லாவிட்டால் உருவாகாவிட்டால், கரோனா வைரஸில் நாடு அடைந்த சேதத்தைக் காட்டிலும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய இழப்பைச் சந்தக்க நேரிடும்.
நாட்டில் உள்ள முதியோர்கள், உடல்ரீதியாக வலுவிழந்த மக்களை இழந்துவிடாமல் லாக்டவுனை புத்திசாலித்தனமாகத் தளர்த்துவது அவசியம்.
ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நேரடியாக பிரதமர் மோடி பணம் வழங்காததற்கு முக்கியக் காரணம் ரேட்டிங் நிறுவனங்கள்தான் என அறிந்தேன். நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்தால் அந்த ரேட்டிங் நிறுவனங்கள் மத்திய அரசின் தரத்தைக் குறைத்துவிடும் என்பதால் பணத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT