Published : 16 May 2020 02:17 PM
Last Updated : 16 May 2020 02:17 PM
வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க அதிகாரிகளை முடுக்கிவிடுங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உ.பி. முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஒரய்யா மாவட்டத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மறறொரு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 36 பேர் படுகாயமடைந்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை அதிகாரிகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நெருக்கடி நிலவுகின்ற இந்த நேரத்தில் தேவையின்றி அரசியல் செய்யாமல், கரோனா வைரஸ் கட்டாய ஊரடங்குக்கு மத்தியில் வீடு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை மத்திய, மாநில அதிகாரத்தில் உள்ள கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.
இன்று அதிகாலை ஒரய்யாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரிகள் மோதிக்கொண்டன.
நேற்றுதான் உத்தரப் பிரதேச முதல்வர் தொலைக்காட்சியில் புலம்பெயர்ந்தோருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக அறிவித்ததைக் காண முடிந்தது. ஆனால், கீழ்மட்ட அளவில் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்தவில்லை என்பதாலேயே மாநிலத்தில் ஒரு பெரிய விபத்துக்கு அது வழிவகுத்தது என்பது தெரிகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தயவுசெய்து புலம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகளை முடுக்கிவிடுங்கள்.
அதிகாரிகள் அவர்களுக்கான உணவு மற்றும் பிற பொருட்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தால், அவர்கள் ஒரய்யாவில் உள்ள ஒரு தேநீர் கடையில் இறங்கியிருக்க மாட்டார்கள். புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் ரயில்வே தீவிரமாக இருக்க வேண்டும்.
பாஜகவும் காங்கிரஸும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் அவர்கள் செய்யும் அரசியல் சரியாக இல்லை. மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களில் இந்தப் பிரச்சினையை கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் தொழிலாளர்கள் சஹரன்பூரில் ஆற்றைக் கடந்து வீட்டுக்குச் செல்லும் நிலைமையே உள்ளது. காங்கிரஸ் அல்லது பாஜக எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஆனால் அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் வீட்டிற்கு நடந்துவர முயல வேண்டாம், அதற்கு பதிலாக பேருந்துகள் மற்றும் ரயில்களுக்காக காத்திருக்க வேண்டும். வீட்டிற்கு நடந்து செல்வதற்குப் பதிலாக, அவர்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும்..
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியை அரசு செய்ய வேண்டும்.''
இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT