Published : 16 May 2020 02:10 PM
Last Updated : 16 May 2020 02:10 PM
கரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு இருக்கிறதா எனக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்தத் தகவலை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 20 லட்சத்து 39 ஆயிரத்து 952 மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் வெள்ளி்க்கிழமை காலை வரை 92,911 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் அமைப்பின் ஆய்வு மற்றும் திட்டமிடல் பிரிவின் தலைவர் ரஜினிகாந்த் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததையடுத்து, கடந்த இரு மாதங்களாக பிசிஆர் பரிசோதனை அளவை அதிகப்படுத்தி நாள்தோறும் ஒருலட்சம் அளவுக்கு அதிகப்படுத்திவிட்டோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையைும் 14 ஆக அதிகப்படுத்தியிருக்கிறோம்.
லாக்டவுன் தொடக்கத்தில் புனே வைரலாஜி நிறுவனத்தில் ஒரு ஆய்வகம் மற்றும் 100 பரிசோதனைக்கூடங்களுடன் தொடங்கினோம். இப்போது ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் 360 அரசு மருத்துவப் பரிசோதனை மையங்களிலும், 147 தனியார் மையங்களிலும் செயல்படுகிறது.
மார்ச் 31-ம் தேதி வரை 47,852 மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில் இது ஏப்ரல் 30-ம் தேதிக்குள் 9,02,652 மாதிரிகளாக அதிகரித்துள்ளன. மே 15-ம் தேதி்க்குள் 11 லட்சத்து 37ஆயிரத்து 298 மாதிரிகளும் எடுக்கப்பட்டன.
ஆர்சி-பிசிஆர் பரிசோதனையில் எடுக்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிக்க முழுமையாக தானியங்கி தொழில்நுட்பத்தில் செயல்படும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த இயந்திரத்தில் 24 மணிநேரத்தில் 1,200 மாதிரிகளின் முடிவை அறிய முடியும்.
மேலும், புனே என்ஐவி நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த எலிசா டெஸ்ட் கருவி கரோனா நோயாளிகளை எளிதாகக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இரண்டரை மணிநேரத்தில் 90 பேருக்குப் பரிசோதித்து முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்''.
இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT