Last Updated : 16 May, 2020 08:15 AM

 

Published : 16 May 2020 08:15 AM
Last Updated : 16 May 2020 08:15 AM

வாரணாசியிலிருந்து மேலும் 2 பேருந்துகளில் சொந்த ஊர் புறப்பட்ட 50 தமிழர்கள்

புதுடெல்லி

வாரணாசியில் இருந்து 50 தமிழர்களுடன் மேலும் 2 பேருந்துகள் நேற்று தமிழகம் கிளம்பின. புனித யாத்ரீகர்களாக வந்து ஊரடங்கினால் சிக்கிய இவர்களுக்கும் தமிழக அரசு திரும்பிவர அனுமதி அளிக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான வாரணாசிக்கு தமிழகத்தில் இருந்து புனித யாத்ரீகர்கள் அதிகம் வருவது வழக்கம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமலான ஊரடங்கால் இங்கு சுமார் 400 தமிழர்கள் சிக்கினர். இவர்கள் அனைவருக்கும் அங்குள்ள உ.பி. அரசின் மாவட்ட நிர்வாகமும், சில மடங்களும் உணவு, மருந்துகள் அளித்துப் பாதுகாத்து வந்தன. கடந்த ஏப்ரல் 14 இல் 3 பேருந்துகளில் 127 தமிழர்களுடன் முதலாவதாக தமிழகம் கிளம்பியது.

தொடர்ந்து புதுச்சேரிக்கு 2, மதுரை 2, திருநெல்வேலி 1 என 8 பேருந்துகளில் 300 தமிழர்கள் கிளம்பிச் சென்றனர். இந்தப் பேருந்துகளுக்கான கட்டணம் அனைத்தும் யாத்ரீகர்களின் சொந்தச் செலவாகும். இவர்கள் அனைவரும் நேற்று மாலை கடைசியாக திருச்சி மற்றும் மயிலாடுதுறைக்குக் கிளம்பி 2 பேருந்துகளில் சென்றுள்ளனர். இதில், விழுப்புரம் 15, சீர்காழி 8, சிவகங்கை 6, திருச்சி 8, காஞ்சிபுரம் 6, ராணிப்பேட்டை 2 மற்றும் புதுச்சேரி, மதுரை, விருதுநகர், சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தலா ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழர்களுக்கு உதவியதில் முக்கியப் பங்காற்றிய தமிழரும் வாரணாசியின் உதவி ஆட்சியருமான மணிகண்டன் ஐஏஎஸ் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ''வெளிமாநிலங்களில் சிக்கிய உள்ளூர்வாசிகள் சுமார் 40,000 பேர் வாரணாசிக்கு வந்துள்ளனர். இதனால், கரோனா அபாயம் அதிகரிக்கும் சூழலில் இந்த 50 தமிழர்கள் கிளம்பியது நல்லதாகிவிட்டது. இவர்கள் அனைவருக்கும் செய்த கரோனா மருத்துவப் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள தமிழர்களில் சுமார் 15 பேர் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் பேருந்தில் செல்ல முடியாமல் ரயில் போக்குவரத்திற்காகக் காத்திருக்கின்றனர்'' எனத் தெரிவித்தார்.

10 பேருந்துகளுக்கும் வாரணாசி மாவட்ட ஆட்சியர் சார்பில் லாக்டவுன் பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொது விதிமுறைகளில் வெளியிட்டும் வாரணாசியின் ஒரு பேருந்திற்கும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

எனினும், இப்பேருந்துகள் தமிழக எல்லையில் நுழைந்ததும் தடுத்து நிறுத்தப்பட்டு அதன் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவுகளில் தொற்று இல்லாதவர்களுக்கு தமிழக அரசு அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x