Published : 15 May 2020 04:53 PM
Last Updated : 15 May 2020 04:53 PM
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அம்பான்’ புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தின் 12 கடற்கரை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தயாராக இருக்கும் படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில தலைமைச் செயலாளர் அசித் திரிபாதி இது தொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்தி புயல் முன்னெச்சரிக்கையாக தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் குறிப்பாக வடக்குக் கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் சூழ்நிலைகளை நெருக்கமாகக் கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜகத்சிங்பூர், கேந்திரபரா, பலாசோர், பத்ராக் மாவட்ட கலெக்டர்களிடம் தலைமைச் செயலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதித்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறி பிறகு புயலாக மே 16ம் தேதிவாக்கில் தீவிரமடையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், “வடக்கு ஒடிசாவை இந்தப் புயல் தாக்குமா அல்லது மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் நோக்கி நகருமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. தெளிவான தகவல் இல்லை, ஆனாலும் சாத்தியம் என்பதால் அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே முன்னெச்சரிக்கையாக 12 மாவட்ட ஆட்சியர்களை அழைத்து தயார் நிலையில் இருக்க ஆலோசித்துள்ளோம்” என்று தலைமைச் செயலர் தெரிவித்தார்.
ஒடிசா பேரிடர் துரித நடவடிக்கைப் படை, தேசிய பேரிடர் குழு, தீயணைப்பு வீரர்கள், ஆகியோர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கோவிட்-19 தனிமை மையமாக புயலால் பாதிக்கப்பட்டோருக்கான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே புயல் வரும் என்பது உறுதியாகி விட்டால் கடலோர மாவட்டங்களின் ஆபத்தான் பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைக்க மாற்று கட்டிடங்களைத் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT