Published : 15 May 2020 04:18 PM
Last Updated : 15 May 2020 04:18 PM
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்ட சூழலில் முழு ஊதியம் வழங்க முடியாத சிறு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மார்ச் 29-ம் தேதி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனம், பஞ்சாப்பில் உள்ள 41 சிறுதொழில் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுவில், “கடந்த 40 நாட்களுக்கும் மேலாக எந்தவிதமான ஆர்டரும், உற்பத்தியும் நடக்காத நிலையில் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க உத்தரவிடுவது சட்டவிரோதம், அரசியலமைப்புச் சட்டம் 14, 19 (1) (ஜி), 265, 300 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சய் கிஷன் கவுல், பிஆர் காவே ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் சொலி்சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். மனுதாரர் தரப்பில் ஜாம்ஷெட் காமா ஆஜரானார்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. அதன்பின் பதில் மனுத்தாக்கல் செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாம்ஷெட் வாதிடுகையில், “கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிறுவனங்கள் எந்த விதமான உற்பத்தியிலும் ஈடுபடவில்லை, ஆர்டர்களும் கிடைக்கவில்லை. இப்போது முழு ஊதியமும் தொழிலாளர்களுக்கு வழங்க உத்தரவிடுவது நியாயமற்றது. எங்களுக்கு அரசுத் தரப்பில் இதுவரை உதவி இல்லை. நிறுவனங்களின் நிதிநிலை தெரியாமல், ஆராயாமல் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சய் கிஷன் கவுல், பிஆர் காவே ஆகியோர் அமர்வு, பிறப்பித்த உத்தரவில், “சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அடுத்த வாரத்துக்குள் தராத நிலை ஏற்பட்டால்கூட அந்த நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் எடுக்கக்கூடாது. சிறு நிறுவனங்கள் போதுமான வருவாய் ஈட்டாத நிலையில் அவர்களால் ஊதியம் வழங்க இயலாது.
பெரும்பாலான சிறு நிறுவனங்கள் உற்பத்தி இல்லாமல் 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும் சக்தியுள்ளதாக இருக்கின்றன. ஆனால், லாக்டவுனில் 40 நாட்களுக்கும் மேலாக உற்பத்தி நடக்காமல் இருந்தால் எவ்வாறு அவர்களால் ஊதியம் வழங்க இயலும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த வாரத்துக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT