Published : 15 May 2020 01:56 PM
Last Updated : 15 May 2020 01:56 PM
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் முடிந்து விமானப் போக்குவரத்து தொடங்கும்போது விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்புக் கவச உடைகள் (பிபிஇ கிட்) வழங்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சர்வதேச, உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மட்டும் வந்தே பாரத் மிஷன் மூலம் ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 7-ம் தேதி முதல் அழைத்து வரப்படுகின்றனர். சரக்கு விமானப் போக்குவரத்துத் தடையின்றி இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முழுமையான பயணிகள் விமானப் போக்குவரத்து எப்போது இயக்கப்படும் என்பது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த சூழலில் வரும் 17-ம் தேதி 3-ம் கட்ட லாக்டவுனுக்குப் பின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் பட்சத்தில் விமானத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பிபிஇ கிட் வழங்க விமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்கள் சமீபத்தில் நடத்திய ஆலோசனையில், விமான ஊழியர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் பிபிஇ கவச உடைகள் வழங்க முடிவு செய்துள்ளன. இதன்படி முகக்கண்ணாடி, உடலை முழுமையாக மறைக்கும் உடைகள், தலைக்கு உறை போன்றவை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா விமான நிறுவனம் சிவப்பு நிறத்தில் தனது ஊழியர்களுக்கு பிபிஇ கிட்டை அறிமுகப்படுத்தியது. அந்த உடை விமானப் பணிப்பெண்கள் உடல் முழுவதும் மறைக்கும் விதத்தில் இருந்தது. அதேபோன்ற ஆடைகளை இந்திய விமான நிறுவனங்களும் வழங்கும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து விமான நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், “ஏர் ஏசியா நிறுவனம் ஊழியர்களுக்கு முகக்கவசம், அங்கி, அப்ரான், கையுறை போன்றவை அடங்கிய பிபிஇ கவச ஆடைகளை வழங்கியுள்ளது. விஸ்தாரா நிறுவனமும் அதேபோல வழங்க உள்ளது. இண்டிகோ நிறுவனமும் தங்களுக்குரிய பிரத்யேக ஆடைகளைத் தயாரித்து வருகிறது” எனத் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதேபோன்ற பிபிஇ ஆடைகள் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT