Published : 14 May 2020 09:54 PM
Last Updated : 14 May 2020 09:54 PM
இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
மும்பையைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக் இவருக்கு வயது 53. வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி , தான் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியதையடுத்து, ஜாகீர் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்துமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது.
ஜாகீர் நாயக் மீது இந்தியாவில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கும், என்ஐஏ தொடர்ந்துள்ள வழக்கும் நிலுவையில் இருக்கிறது. கடந்த 2016 -ம் ஆண்டு இந்தியா விட்டு வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்தார். அங்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி இந்தியா கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு மத்திய அரசு இன்று அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தன்னை இந்தியா அனுப்பி வைத்தால் விசாரணை நியாயமாக நடைபெறாது என ஜாகீர் நாயக் கருதுவதால் அவரை நாடு கடத்த மாட்டோம் என கடந்த ஆண்டு மலேசிய அரசு மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மதப்பிரச்சாரம் செய்யும் ஜாகீர் நாயக், இன வேறுபாட்டைத் தூண்டும் வகையில் பேசியதையடுத்து அவர் மலேசியாவில் 7 மாநிலங்களில் பேசத் தடை விதிக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
இதனையடுத்து ஜாகீர் நாயக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நிரந்தரக் குடியுரிமையையும் ரத்து செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற குரல்களும் இவருக்கு எதிராக மலேசியாவில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT