கரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாாரத்தை மீட்கும் வகையில் அறிவிக்கும் திட்டத்தி்ல் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான பொருளதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவி்த்தார்
இந்நிலையில் 2-ம் நாளான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 முக்கியப் பிரிவினருக்குத் திட்டங்களை அறிவித்தார். அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வீட்டு வசதி, விவசாயிகள் குறிப்பாக சிறு விவசாயிகள், பழங்குடியின மக்கள் நலன் ஆகியவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
- 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்ளுக்கு மத்திய அரசின் அல்லது மாநில அரசுகளின் ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவர்கள் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை,ஒரு கிலோ பருப்பும் பெறலாம்.
- பொதுவழங்கல் மூலம் வழங்கப்பட்டுள்ள ரேஷன் கரர்டுகளைப் பயன்படுத்தியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ரேஷன் கடைகளில் பெறலாம். நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 23 மாநிலங்களில் உள்ள 67 கோடி பேர் பயன் பெறுவார்கள். 2021 மார்ச் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையடையும். இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ. 3,500 கோடி ஒதுக்கியுள்ளது.
- பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வாடகைக்கு வீடு திட்டம் நகர்ப்புற ஏழைகள், புலம்பெயர் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொண்டுவரப்படும். இந்த வீடுகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
- நடுத்தர குடும்பத்தினர் வீடு வாங்கும் திட்டத்தில் மானியத்துக்காக ரூ.70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்காக கடன்-மானியத்துடன் வீடு வாங்கும் தி்ட்டம் கடந்த 2017 மே முதல் 2020 மார்ச் வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே 3.5 லட்சம் பேர் பயன்பெற்ற நிலையில் கூடுதலாக 2.5 லட்சம் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.
- சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக ரூ.5 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும். இதன்மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதலீட்டுக்காக கடன் வழங்கப்படும்.
- பழங்குடியின மக்களின் தொழில் வளர்ச்சிக்காக ரூ.600 கோடி ஒதுக்கப்படும்.
- விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்காக நபார்டு வங்கிக்கு கூடுதல் செயல்பாட்டு முதலீட்டுக்காக ரூ.30 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புற மற்றும் மண்டல கிராம வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும். இதில் 3 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
- ரூ.50 ஆயிரத்துள்ளாக கடன் பெறும் சிறு வியாபாரிகளுக்கு முத்ரா திட்டத்தின் மூலம் 2 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடி வியாபாரிகள் பயன் பெறுவார்கள்.
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடந்த 2 மாதங்களாக ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 14.62 கோடி மனித வேலை நாட்களுக்கான பணி உருவாக்கப்பட்டுள்ளது.
- சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்படும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டப் பணிகள் ஒதுக்கித் தருமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
WRITE A COMMENT