Published : 14 May 2020 03:11 PM
Last Updated : 14 May 2020 03:11 PM

முன்கூட்டியே தெரிவிக்காமல் கட்டாயத் தனிமையா? பெங்களூரு ரயில் நிலையத்தில் குழப்பத்தால் பயணிகள் ஆத்திரம்

டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயிலில் வந்திறங்கிய பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவர்கள் கட்டாயத் தனிமையில் இருந்த பிறகுதான் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்று அறிவுறுத்தப்பட்டதையடுத்து ஆத்திரம் அடைந்தனர்.

பெங்களூரு வந்த பிறகுதான் இவர்களுக்கு இது தெரியவந்துள்ளது. இதனையத்து ரயில் நிலையத்திலேயே அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

பலரும் 14 நாட்கள் ஹோட்டலில் தங்கும் அளவுக்கு தங்களிடம் பண வசதியில்லை என்று ஆத்திரமடைந்து வாக்குவாதம் புரிந்தனர்.

மனோஜ் சிங் என்ற பயணி ஆங்கில நாளிதழுக்குக் கூறும்போது, “நாங்கள் ஏற்கெனவே வேதனையில் இருக்கிறோம். ரயிலில் ஏறும் முன் ஒருவரும் கட்டாயத் தனிமை பற்றி கூறவேயில்லை. பெங்களூருவில் வந்திறங்கிய பின் தான் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டலில் தனிமையில் இருக்க வேண்டுமென்றால் நாளொன்றுக்கு ரூ.2000 ரூம் வாடகை என்றாலும் 14 நாட்களுக்கு 28,000 ரூபாய் செலவாகும் இதைத் தவிர இதர செலவுகள் இருக்கிறது, குழந்தைகளுடன் இருக்கும் எங்கள் வேதனையை நினைத்துப் பாருங்கள்” என்றார் கோபமாக.

மாநில அரசுகளிடையே சரியான ஒருங்கிணைப்போ, தகவல் பரிமாற்றமோ இல்லாமல் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. இதனால் பயணிகளுக்கு எஞ்சியது குழப்பம் மட்டுமே என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.

இன்னொரு பெண் பயணி தன் தாயாருடன் பெங்களூரு ரயில் நிலையத்தில் கூறும்போது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் கூறினர் இங்கு வந்தால்தான் தெரிகிறது இப்படிச் செய்கின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் பல குடும்பங்கள் ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் சமூக இடைவெளியை மறந்து அமர்ந்திருந்த காட்சியும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

“நாங்கள் ஆட்சேபணை தெரிவித்ததால் 3 மணி நேரம் எங்களை வெயிட்டிங் ரூமில் காக்க வைத்தனர். சமூக தூரம் கடைப்பிடிக்கப்படவில்லை, உணவும் வழங்கப்படவில்லை” என்றார் இன்னொரு பயணி.

அங்கித் ஜெயின் என்ற இன்னொரு பெங்களூருவாசி, தான் செகந்தராபாத்திலிருந்து திரும்பியதாகக் கூறும்போது, “என் பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லை அதனால்தான் வந்தேன். ரயில்வே அதிகாரிகள் தங்களால் செய்வதற்கு ஒன்றுமில்லை, ஒன்று ரூமில் தங்குங்கள் அல்லது அரசு தனிமை மையத்திற்குச் செல்லுங்கள் அல்லது செகந்திராபாத் செல்லுங்கள் என்கின்றனர். இது நியாயமற்றது. கட்டாயத் தனிமை அவசியம் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் ஊருக்கே புறப்பட்டிருக்க மாட்டேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x