Published : 14 May 2020 08:00 AM
Last Updated : 14 May 2020 08:00 AM
தெலங்கானாவில் விவசாயிகள் இனி எப்போது எந்த பயிர் வைக்கவேண்டும் என்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ், விவசாயிகளின் நலனுக்காக நேற்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்கவும் தங்கள்விளைபொருட்களை குறைந்தபட்சலாபத்திலாவது விற்பனை செய்வதை உறுதி செய்யவும் இந்ததிட்டம் உதவும். புதிய திட்டத்தின்படி, வரும் மழைக்காலம் முதல் விவசாயிகள், நெல், துவரை, பருத்தி, காய்கறிகள், கரும்பு ஆகியவற்றை அரசு நிர்ணயிக்கும் அளவிலேயே பயிரிட வேண்டும்.
அனைவரும் நெல் பயிரிட்டால் அதை வாங்குவது யார்? விற்பது யார்? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அந்தந்த மாவட்ட மண்ணின் தரத்திற்கேற்ப எந்தெந்தபயிர் செய்யலாம் என ஆலோசனை வழங்கப்படும். இதற்காக விவசாயதுறையை வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைத்து மண் பரிசோதனை செய்து அதன்படி இனி தெலங்கானாவில் விவசாயம் நடைபெற உள்ளது. அரசின் சந்தைப்படுத்துதல் துறையும் விவசாய பொருட்களை குறைந்தபட்ச லாபத்திற்காவது விற்கும் அளவுக்கு அரசுக்குஆலோசனை வழங்க வேண்டுமென முதல்வர் கே.சந்திர சேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தெலங்கானா மாநிலத்தில் நெல் 50 லட்சம் ஏக்கர், துவரை 10 லட்சம் ஏக்கர், பருத்தி, மிளகாய் தலா 10 லட்சம் ஏக்கர் என ஒவ்வொரு பயிருக்கும் விவசாயம் செய்ய வரைமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தவகை பயிரை அரசு நிர்ணயிக்கும் முறையில் விவசாயிகள் பயிரிடவேண்டும். இதன்படி பயிரிடுவோருக்கு மட்டுமே அரசின் ‘ரைத்து பந்து’ திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வருடாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இதைக் கடைப்பிடிக்காத விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட மாட்டாது. மேலும், விதை விநியோகத்திலும் தரம் இருத்தல் அவசியம். தரமான விதைகளை விற்காவிடில் சம்மந்தப்பட்ட நிறுவனம் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவசாய திட்டத்திற்கு இப்போதே விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT