Published : 14 May 2020 07:55 AM
Last Updated : 14 May 2020 07:55 AM
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர் வாங்க ரூ.2 ஆயிரம் கோடியும் வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம அமைச்சரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலநிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார். இதில் பிரதமர் மோடி தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து எந்தவிதமான பணமும் இதுவரை கரோனா தடுப்புக்கு செலவிடப்படவில்லை, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக செலவிடப்படவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. மேலும், பிரதமர் நிவாரண நிதி இருக்கும்போது பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை தேவையா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையை மத்திய தலைமைத் தணிக்கைத்துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இந்த சூழலில் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து கரோனா ஒழிப்புக்காகவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் நிதி ஒதுக்கப்படஉள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவி்ப்பில், “முதல் கட்டமாக ஒதுக்கப்பட உள்ள ரூ.3,100 கோடியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர் வாங்க ரூ.2 ஆயிரம் கோடியும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடியும், கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு ஆதரவாக ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது.
கரோனா வைரஸை சமாளிக்கப் போதுமான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வென்டிலேட்டர்களை ரூ.2 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட உள்ளது. இந்த வென்டிலேட்டர்கள் அனைத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குப் பயன்பாட்டுக்காக அனுப்பிவைக்கப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் உதவ மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இந்தப் பணம் மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது நகராட்சி ஆணையர்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி, போக்குவரத்து ஆகியவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிதி 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 50 சவீதம், கரோனா நோயாளிகள் அளவில் 40 சதவீதம் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் 10 சதவீதம் சரிவிகிதப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும். இந்தப் பணம் மாநிலப் பேரிடர் நிவாரண ஆணையர் மூலம் மாவட்ட ஆட்சியர் அல்லது நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றவை ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும், அதை ஊக்கப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் ரூ.100 கோடி வழங்கப்படஉள்ளது''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT