Published : 13 May 2020 06:04 PM
Last Updated : 13 May 2020 06:04 PM
ஸ்ரீகாகுளம் (ஆந்திரப் பிரதேசம்)
சத்தீஸ்கருக்கு ஒரு திருமண நிகழ்வுக்காகச் சென்ற பேருந்து 2 மாதங்களுக்குப் பிறகு திரும்பிய நிலையில், ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்களை விடுவிக்கவும் சொந்த ஊரான பலாசாவிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் பலாசா தொகுதி எம்எல்ஏ தலையீடு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரின் பிலாய் நகரிலிருந்து திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பிய ஒரு பேருந்து, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் மாநில எல்லை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மெல்பூட்டி சப்-இன்ஸ்பெக்டர் பி.சித்தார்த்த குமார் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
''பலாசா நகரத்தைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் மார்ச் மாதம் திருமணத்திற்காக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிலாய் நகருக்குச் சென்றிருந்தனர். அவர்கள் திரும்பி வரத் திட்டமிடப்பட்ட நாளில், நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, எனவே இந்த நாட்களில் அவர்கள் பிலாய் நகரிலேயே சிக்கிக்கொண்டனர். கடைசியில் அவர்கள் அங்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஆந்திரப் பிரதேசத்திற்குத் திரும்பினர்.
இருப்பினும், சொந்த ஊரான ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அனுமதி பெறவில்லை. எனவே பட்டுபுரம் சோதனைச் சாவடியில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்குத் தேவையான அனுமதி பெற சிறிது கால அவகாசம் பிடித்தது. மாவட்ட ஆட்சியர் பின்னர் அவர்களை தெக்காலி பகுதியில் தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்ப அனுமதி வழங்கினார்.
இதற்கிடையில் இரவு 9 மணியளவில். பலாசா தொகுதி எம்எல்ஏ சீத்ரி அப்பலராஜு சோதனைச் சாவடிக்குச் சென்று அதிகாரிகளிடம் பேருந்தை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். காவல்துறையினர் மறுத்தனர். அவர்களை டெக்கலியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்புவதற்கான ஆட்சியர் உத்தரவு குறித்து எம்எல்ஏவிடம் போலீஸார் தெரிவித்தனர். ஆனால் எம்எல்ஏ, இக்குழுவை பலாசாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்ப வேண்டுமென பரிந்துரை செய்தார்.
காவல்துறையினர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். ஆயினும் 24 பேரை தெக்காலிக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவு வந்திருந்த போதிலும், எம்எல்ஏ கேட்டுக்கொண்டதற்கிணங்க, மண்டாசா இளைஞர் பயிற்சி மையத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு பேருந்து அனுப்பப்பட்டது.
எம்எல்ஏ தலையீட்டையும் நாங்கள் முழுமையாக ஏற்கவில்லை. அவரது தலையீட்டை ஏற்றுக்கொண்டிருந்தால் அவரது தொகுதியான பலாசாவிற்கே நாங்கள் பேருந்தை அனுப்பியிருக்கவேண்டும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. பேருந்தில் உள்ள 24 நபர்களும் ஓட்டுநர் மற்றும் கிளீனர் மண்டாசா தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதன் மூலம் இந்த விவகாரம் இணக்கமாகத் தீர்க்கப்பட்டது''.
இவ்வாறு சித்தார்த்த குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT