Published : 12 May 2020 07:40 PM
Last Updated : 12 May 2020 07:40 PM
சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பும் இந்தியர்களுக்கு கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் செய்வது அவசியம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறினார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திர மர்மு, லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோருடன் கரோனா பரவல் தடுப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே உடனிருந்தார். பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களின் ஆட்சியாளர்களுடன், கோவிட்-19 மேலாண்மைக்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருவதன் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியதாவது:
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவது அதிகரித்துள்ள நிலையில், திரும்பி வரும் அனைவரையும் சரியாகக் கண்காணித்தல், தொடர்புத் தடமறிதல், போதிய மருத்துவப் பரிசோதனை மற்றும் உரிய காலத்தில் சிகிச்சை அளிப்பதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் இவற்றைச் செய்ய வேண்டும்.
வந்து இறங்கும் இடத்தில் மருத்துவப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்தி வைத்தல், சிகிச்சை அளித்தலுக்கு செய்துள்ள ஏற்பாடுகளைப் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் தெரிவித்துள்ளன. தொடர்புத் தடமறிதலை சிறப்பாகச் செய்யவும், உரிய மருத்துவ ஆலோசனைகளைத் தெரிவிக்கவும் உதவும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் கட்டாயமாகப் பதிவிறக்கம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
பாதிப்புள்ள மற்றும் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், தீவிர சுவாச மண்டலத் தொற்று (சாரி) / சளி போன்ற உடல்நலக் குறைபாடு (ஐ.எல்.ஐ.) உள்ளவர்களைக் கண்காணிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார். தங்கள் பகுதியில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தால் அவற்றின் உதவியை நாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT