Published : 12 May 2020 04:33 PM
Last Updated : 12 May 2020 04:33 PM
பிஎம் கேர்ஸ் நிதி குறித்து மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் தணிக்கை செய்ய வேண்டும். இதுவரை கரோனா நோயாளிகளுக்கு ஏன் பிஎம் கேர்ஸ் நிதி செலவிடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி காணொலி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''பிரதமர் நிவாரண நிதி என இருக்கும்போது ஏன் பிஎம் கேர்ஸ் நிதி தனியாக உருவாக்கப்பட்டது. கரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில்தான் பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை பிஎம் கேர்ஸ் நிதி்யை கரோனா நோயாளிகளுக்கு ஏன் செலவிடவில்லை என்பது கவலையாகவே இருக்கிறது.
பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து மத்திய தலைமை தணிக்கை அலுவலகம் அல்லது சுயாட்சி பெற்ற நம்பகத்தன்மை உள்ள நிறுவனம் அதைத் தணிக்கை செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து அதிகமாக நிதிகோரக்கூடாது'' எனத் தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்தில், ''கரோனா பாதிப்பு காலத்தில் மக்கள் நலனுக்காக முடிவெடுக்க வேண்டிய நிலையில் பிரதமர் மோடி அந்தத் தேவைக்கு எதிரானவர். பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன.
வெளிப்படைத்தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி. மக்கள் நலனைப் பற்றி நினைக்காமல் வாழ்ந்த பிரதமர் மோடி என்று வரலாறு நினைவுபடுத்தும். சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் குறித்து கவலைப்படாதவர் பிரதமர் மோடி.
ஏழை மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் இன்னும் பொருளாதார நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்காமல் தாமதிக்கிறது. லாக்டவுனை அறிவிக்கும் முன் எந்தவிதாமான திட்டமிடலிலும் மத்திய அரசு இறங்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT