Published : 12 May 2020 01:43 PM
Last Updated : 12 May 2020 01:43 PM
டெல்லி மதமாநாட்டிற்கு கரோனா தொற்றுடன் வந்து அதன் பரவலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகத் தெரிகிறது
கடந்த மார்ச் 1 முதல் 22 வரை டெல்லி நிஜாமுத்தீனின் தப்லீக் தலைமையகத்தில் மதமாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்கள் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது தாமதமாத் தெரிந்தது.
இதையடுத்து, அனைவரும் தேவைக்கு ஏற்ப மருத்துவமனை சிகிச்சையும், தனிமை முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், இந்தியாவின் கரோனா தொற்றுக்களில் 30 சதவிகிதம் பரவலுக்கு காரணம் என மத்திய அரசு கூறியது.
இதனால், அவர்களில் பலர் மீது தொற்று நோய் பரவல் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவாகின. இன்னும் சிலர் சுற்றுலா மற்றும் மருத்துவ விசாக்களை பெற்று தவறான வழியில் மதநாட்டிற்கு வந்ததும் தெரிந்தது.
இவை அனைத்தும் ஒரேவகை நடவடிக்கையுடன் அன்றி மாநிலங்களுக்கு ஏற்றபடி அவை வேறுபட்டன. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவாகின.
சில மாநிலங்களில் சிறைகளிலும், சிறப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டனர். டெல்லியின் முகாம்களில் உள்ள வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களை ஒருவாரத்திற்குள் டெல்லி காவல்நிலைய தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நேற்று நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்படாமல் உள்ளன.
இதுபோல், அனைத்து மாநிலங்களும் ஒரே வகையான முடிவை எடுக்காமல் திணறும் நிலை ஏற்பட்டது. அம்மாநிலங்களில் ஆளும் பல்வேறு கட்சிகளின் ஆட்சியும் அதன் காரணம் ஆகும்.
இந்நிலையில், இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய வெளியுறத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கும் என எதிர்நோக்கப்படுகிறது.
இதற்கு ஏற்றபடி மாநில அரசுகள் வெளிநாட்டு ஜமாத்தினர் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஐந்நூற்றுக்கும் அதிகமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT