Published : 12 May 2020 07:02 AM
Last Updated : 12 May 2020 07:02 AM
ரூ.30 ஆயிரம் செலவு செய்து சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளியை அவரது வீட்டுக்குள் குடும்பத்தார் விட மறுத்த சம்பவம் திரிபுரா மாநிலத்தில் நடந்துள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவைச் சேர்ந்தவர் 37 வயதான கோவிந்தா தேவ்நாத். கோவிந்தா தனது தாயார், தம்பிகள், மனைவி மாம்பி தேவ்நாத், குழந்தையுடன் வசித்து வருகிறார். தினக்கூலி தொழிலாளியான கோவிந்தா, கடந்த மார்ச் மாதம் அசாம் மாநிலம் சிலாபத்தரில் உள்ள தனது மைத்துனர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் அங்கேயே தங்கிவிட்டார்.
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட நிலையில் ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு திரிபுராவுக்குப் புறப்பட்டார். திரிபுரா - அசாம் மாநில எல்லையில் உள்ள சுராய்பரி சோதனைச் சாவடியில் அவர் தடுத்து நிறுத்தபட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். சோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரிய வந்ததும் அவர் திரிபுராவுக்கு அனுப்பப்பட்டார்.
போலீஸ் பாதுகாப்புடன் அவர் மனைவி மாம்பி தேவ்நாத் தங்கியுள்ள வீட்டுக்கு வந்தார். ஆனால், மனைவியோ அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற பயத்தால் அவரை அவர்கள் அனுமதிக்க வில்லை.
இதுகுறித்து கோவிந்தா கூறும்போது, “ரூ.30 ஆயிரம் செலவு செய்து அசாமில் இருந்து திரிபுராவுக்கு வந்தேன். தனிமைப்படுத்துதல், நீண்ட தூரம் பயணம் என்ற பிரச்சினைகளில் சிக்கி வீட்டுக்கு வந்தால் எனது மனைவியும், குழந்தையும் என்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நான் என்ன செய்வேன், எங்கு செல்வேன் என்று தெரியவில்லை” என்றார்.
அவரது மனைவி மாம்பி தேவ்நாத் கூறும்போது, “ஊரடங்கு இருப்பதால் கணவர் கோவிந்தாவை, அசாமிலேயே தங்கி இருக்கச் சொன்னேன். ஆனால் அவர் திடீரென கிளம்பி வந்துவிட்டார். நான் என் தாய் வீட்டில்தங்கியுள்ளேன். வயதான தாயையும், இளம் குழந்தையையும் காப்பாற்றவே நான் அவரை அனுமதிக்கவில்லை. எனது தாயாருக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ஆபரேஷன் செய்யப்பட்டது. எனவே அவரை எங்கேயாவது தனிமை வார்டில் வைத்திருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். சிகிச்சை பெற்ற பிறகு அவர் வீட்டுக்கு வரட்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து கோவிந்தாவை, அருகிலுள்ள தனிமைப்படுத்துதல் வார்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT