Published : 11 May 2020 08:11 PM
Last Updated : 11 May 2020 08:11 PM
டெல்லியின் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 அளிக்கிறது அங்கு ஆளும் ஆம் ஆத்மி அரசு. கரோனாவின் ஊரடங்கால் இழந்த வேலை இழப்பை சமாளிக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரலைத் தடுக்க முதன்முறையாக தேசிய அளவில் மத்திய அரசு மார்ச் 22 முதல் ஊடங்கு அறிவித்தது. இதனால், மாநிலங்கள் முழுவதிலும் பல்வேறு வகை தொழிலாளர்களுக்கு பாதிப்படைந்தனர்.
இதை சமாளிக்க டெல்லியில் உள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அம்மாநில அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பதிவு செய்த கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 அவர்கள் வங்கிகணக்கில் செலுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியின் தொழிலாளர் துறை அமைச்சரான கோபால் ராய் கூறும்போது, ‘‘டெல்லியில் பதிவு செய்த கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளனர். இதை செய்யாதவர்களுக்கு மே 15 முதல் 25 ஆம் தேதி வரை புதியப் பதிவுகளும் துவங்குகின்றன.
டெல்லி அரசின் இணையதளத்தில் இப்பதிவினை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அல்லது தானாகாவும் செய்யலாம். இதை அரசு மே 25 க்கு பின் சரிபார்த்து அனைவருக்கும் ரூ.5000 இழப்பீடுக் காலத் தொகையாக வழங்கும்.’’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லியில் கட்டிடப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வகை தொழிலாளர்கள் தம் மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். இவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் போக்குவரத்து வசதி செய்யாத நிலையிலும் வேறு வழியின்றி நடந்தே பல நூறு கி.மீ செல்கின்றனர்.
இதை தடுக்க அவ்வப்போது பேருந்துகளும், தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் விடப்பட்டும் பலனில்லை. ஏனெனில், அதற்காக இணையதளங்களில் பதிவு செய்து செல்லும் அளவிற்கு பலரிடம் வசதிகள் இல்லை.
இந்நிலையில், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அரசின் இந்த அறிவிப்பு கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம் ஆகும். இதன்மூலம், டெல்லியில் இருந்து தொடர்ந்து வெளியேறும் வெளிமாநிலத் தொழிலாளர்களை தடுக்கும் முயற்சியாகவும் இந்த அறிவிப்பு உள்ளது.
இதுபோல், தொழிலாளர்களுக்கு டெல்லி அரசு தற்போதைய ஊரடங்கு சமயத்தில் இழப்பீடாக ரொக்கத் தொகை வழங்குவது புதிதல்ல. டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ரூ.5000 வங்கிகள் மூலமாக அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT