Published : 11 May 2020 08:01 PM
Last Updated : 11 May 2020 08:01 PM
கரோனா ஊரடங்கு காரணமாக ரமலான் மாதத்தில் டெல்லியில் ரூ.600 கோடி இழப்பு ஏற்படும் என எதிர்நோக்கப்படுகிறது.
கரோனா வைரஸால் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுவதும் காரணம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தேவ்ராஜ் பவேஜா கூறும்போது, ‘‘ரமலான் நோன்பு சமயத்தில் பழைய டெல்லியின் சாந்தினிசவுக், ஜாமியா மஸ்ஜீத் பஜார், சதர் பஜார் ஆகிய பகுதிகளின் கடைகளில் வியாபார நெரிசல் அதிகமாக இருக்கும்.
ஆடைகளுக்கான துணிகள், காலணிகள் மற்றும் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்களின் வியாபாரம் சூடு பிடிக்கும். கரோனாவால் அனைத்து கடைகளும் மூடப்பட்டதுடன், திறப்பு நேரங்களிலும் வெறிச்சோடி விட்டன. இதன் இழப்பு மதிப்பு ரூ.600 கோடிக்கு மேல் இருக்கும்.’’ எனத் தெரிவித்தார்.
சாந்தினி சவுக் பகுதியின் உணவு பொருட்கள் கடைகள் மற்றும் ஓட்டல்கள் டெல்லியில் மிகவும் பிரபலமானவை. முகலாயர் ஆட்சிக் காலத்திய அசைவ உணவுகள் இன்னும் கூட இங்குள்ள ஓட்டல்களில் கிடைக்கிறது.
இதுகுறித்து சாந்தினிசவுக், மத்திய மஹால் பகுதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவரான அக்ரம் கான் கூறும்போது, ‘‘ரமலான் மாதம் நோன்பு முடிக்க சாந்தினி சவுக்கின் ஓட்டல்களில் குவியும் கூட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த மாதத்தில் கிடைக்கும் சிறப்பு உணவு வகைகளை சுவைக்க முஸ்லிம் அல்லாத பொதுமக்களும் குவிவது உண்டு.
அனைத்து தரப்பினரின் வருகை குறைந்ததால், சாந்தினி சவுக் மற்றும் சதர் பஜாரில் மட்டும் வியாபாரிகளின் இழப்பு ரூ.200 கோடி எனவும் மதிப்பிடப்படுகிறது.’’ எனத் தெரிவித்தார்.
ரம்ஜான் குரல் பதிவு
கரோனா காரணமாக உருவான பல்வேறு வகை தடைகளால் இந்த வருடம் ரம்ஜான் விமரிசையாகக் கொண்டாடப் போவது இல்லை எனவும் முஸ்லிம்கள் இடையே பேச்சு உள்ளது. இதன் மீதான சில ஆடியோ குரல் பதிவுகள் முகம் அறியாதவர்களால் சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது.
இதன் பாதிப்பாகவும் டெல்லியின் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற குரல் பதிவுகளின் மீது புகார் எதுவும் செய்யப்படவில்லை என்பதால் டெல்லி போலீஸாரும் அதில் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT