Published : 11 May 2020 07:46 PM
Last Updated : 11 May 2020 07:46 PM
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் மாநிலத்திற்குள் பயணம் செய்ய ‘லாக்டவுன் பாஸ்’ தேவை இல்லை என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில் மாநிலத்திற்கு உள்ளே நுழையவும், வெளியேறவும் பாஸ் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘மாவட்டங்களுக்கு இடையேயும், அதன் உள்ளேயும் போக்குவரத்திற்கானப் பயணம் செய்ய எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால், அன்றாடம் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரமான காலை 7.00 முதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும்.
இந்த வசதி, கரோனா பாதிப்பிற்கு உள்ளாகி தடை உள்ள மாவட்டங்களிலும் அதன் பகுதிகளிலும் கிடையாது. ஊரடங்கு அமலிஊரடங்கு நேரங்களில் அத்தியாவசியக் காரணங்களுக்கானப் பயணங்களுக்கு வழக்கம் போல் அனுமதி பெற வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மார்ச் 22 முதல் மத்திய அரசு ஊரடங்கை அமலாக்கியது. அப்போது முதல் மற்ற பல மாநிலங்களை போல் எந்த தளர்வையும் ராஜஸ்தான் அரசு ஏற்படுத்தவில்லை.
இம்மாநிலத்தில் சிறிய வாகனங்களில் பயணம் செய்வோருக்கு லாக்டவுன் பாஸ் வழங்கும் அதிகாரம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர். தாசில்தார், போக்குவரத்து அதிகாரி, காவல்நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் அனைவரும் அன்றாடம் வழங்கிய லாக்டவுன் பாஸ் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. வெளிமாநிலம் செல்வோருக்கான லாக்டவுன் பாஸ், மாவட்ட ஆட்சியர் மட்டுமே வழங்குவதாகவும் இருந்தது.
இதேபோல், வெளிமாநிலத்தில் வருபவர்களை தனிமைப்படுத்த உத்தரவு இடும் அதிகாரமும் மாவட்ட ஆட்சியர்களிடம் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் மே 17 ஆம் தேதிக்கு பின்பே மாற்றம் அறிவிக்கப்படவும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT