டெல்லியில் இருந்து நாளை 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் 40 நாட்களுக்குப் பின் இயக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கான நிலையான வழிகாட்டிநெறிமுறைகளை (எஸ்ஓபி) மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. தற்போது, வெளிமாநிலங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கான ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. 3-ம் கட்ட லாக்டவுன் வரும், 17-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், நாளை முதல், 15 குறிப்பிட்ட ரயில்கள் டெல்லியிலிருந்து இயக்கப்பட உள்ளன.
இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்து நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கரோனா அறிகுறிகள் இல்லாதவர்களாக இருத்தல் வேண்டும்.
- உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
- ரயிலில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது முதல், பயணம் முடியும் வரை சமூக விலகலைப் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
- பயணிகள் அனைவரும் கண்டிப்பாகப் பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- பயணிகள் ரயில் நிலையத்துக்குள் வந்தவுடனும், பெட்டியில் ஏறி அமர்ந்தவுடனும் அவர்களுக்கு சானிடைசரை ரயில்வே அதிகாரிகள் வழங்கிட வேண்டும்.
- ரயில் பயணிகளுக்கு கம்பளிப் போர்வை ஏதும் வழங்கப்படாது.
- ரயில் வருகை, முன்பதிவுக்கான வழிமுறைகள், ரயில் நிலையத்துக்குள் பயணிகள் நுழைதல், வெளியேறுதல் போன்றவற்றுக்கான வழிகாட்டுதல்களை ரயில்வே வெளியிட வேண்டும்.
- ரயில்கள் அனைத்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தியபின்புதான் இயக்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகத்தின ஊழியர்கள், அலுவலர்கள் மூலம் பயணிகளுக்கு சுகாதார ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT
Be the first person to comment