Published : 11 May 2020 03:44 PM
Last Updated : 11 May 2020 03:44 PM
பல்வேறு இடங்களில் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பணிகளை தடையின்றி, வேகமாக மேற்கொள்வதற்கு சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் மாநில அரசுகள் ஒத்துழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் 2020 மே 10ஆம் தேதி காணொலி மூலம் நடந்த கூட்டத்தில், `ஷ்ராமிக் சிறப்பு' ரயில்கள் மூலமும், பேருந்துகள் மூலமும், குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் நிலை, ரயில் பாதையில் நடந்து செல்லும் நிலைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று கூறி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
`ஷ்ராமிக்' சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளின் பயணத்துக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பற்றி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு `ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களில் அல்லது பேருந்துகளில் புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதுவரையில் அந்தத் தொழிலாளர்களுக்கு கவுன்சலிங் வசதி செய்வதுடன், அருகில் உள்ள முகாம்களில் தங்கும் வசதி செய்து தர வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பல பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை விரைவில் அனுப்பி வைப்பதற்கு, தடங்கல்கள் இல்லாமல் `ஷ்ராமிக்' ரயில்களை அதிக அளவில் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT