Published : 11 May 2020 10:49 AM
Last Updated : 11 May 2020 10:49 AM
தேசிய தொழில்நுட்ப நாளான இன்று கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் மருத்துவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அனைவரையும் வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில்நுட்ப நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கும், 1998-ம்ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்திய விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி ராஜஸ்தானில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் நடத்தப்பட்டது. அந்த வெற்றி நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “தேசிய தொழில்நுட்ப நாளான இன்று, மற்றவர்கள் வாழ்வில் தொழில்நுட்பங்கள் மூலம் ஆக்கபூர்வமான, சாதகமான மாற்றங்களைக்கொண்டு வந்தவர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது.1998-ம்ஆண்டு இந்த நாளில் நம்முடைய விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனையைச் செய்ததை நினைவுகூர வேண்டும். இந்திய வரலாற்றில் இன்றைய நாள் மிகப்பெரிய மைல்கல். 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை மூலம் அரசியலில் வலிமையான தலைமையை வேறுபடுத்திக் காட்டியது.
இன்று, கரோனாவிலிருந்து உலகம் விடுபட பல்வேறு முயற்சிகளில் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தொழில்நுட்பம் உதவி வருகிறது. கரோனாவை வெல்லும் போரில் தடுப்பு மருந்து கண்டுபடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த பூமியை ஆரோக்கியமாகவும், வளமாகவும் மாற்றுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT