Last Updated : 11 May, 2020 09:30 AM

4  

Published : 11 May 2020 09:30 AM
Last Updated : 11 May 2020 09:30 AM

இனிமே சீனா எதுக்கு?: ஒரே மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் ரேபிட் கிட் முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிப்பு: ஐசிஎம்ஆர், புனே வைரலாஜி சாதனை

கோப்புப்படம்

புதுடெல்லி,

கரோனா வைரஸ் நோய் பாதிப்பில் முதல்கட்டமாக ஒரு உடலில் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புசக்தி) உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறியும் ரேபிட் கருவியை புனேவில் உள்ள இந்திய வைரலாஜி நிறுவனமும் (என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து வெற்றிகரமாகத் தயாரித்துள்ளன என்று மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் கருவிகள் தரம் குறைந்தும், தவறான முடிவுகளையும் கொடுத்தன. இதனால் லட்சக்கணக்கான ரேபிட் பரிசோதனைக் கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து உள்நாட்டில் ஆன்டிபாடி கிட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய வைரலாஜி நிறுவனமும்(என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து ஒரு மாதத்துக்குள் கண்டுபிடித்துள்ளன.

இந்திய வைரலாஜி நிறுவனமும் (என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து உள்நாட்டிலேயே முற்றிலும் ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவியை (ஆன்டிபாடி கண்டறிதல்) கண்டுபிடித்துள்ளன என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய வைரலாஜி நிறுவனமும்(என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கண்டுபிடித்துள்ள ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி கரோனா நோயாளிகளைக் கண்டறியும் பணியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இரண்டரை மணிநேரத்தில் 90 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும். இதன் மூலம் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் விரைவாகச் செயல்பட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.

மும்பையில் உள்ள இரு முக்கிய கரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில் இந்தக் கருவிகள் பரிசோதிக்கப்பட்டதில்,வெற்றிகரமான, துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளன. ஜைடஸ் காடிலா நிறுவனத்துடன் இணைந்து ஐசிஎம்ஆர் மிகப்பெரிய அளவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸைக் கண்டறியும் கருவிகளை சீனா, தென்கொரியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், சீனாவிலிருந்து வந்த கருவிகள் தரக்குறைவாக இருந்ததை அறிந்தும், இந்தியாவின் இக்கட்டான சூழலை அறிந்து இந்திய மருத்துவ வல்லுநர்களும், ஆய்வாளர்களும் களத்தில் இறங்கி ஒரு மாதத்தில் உள்நாட்டிலே ரேபிட் கருவியைத் தயாரித்து தங்களாலும் முடியும் என உலகிற்கு இந்தியாவின் வலிமையை நிரூபித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x