Published : 09 May 2020 02:30 PM
Last Updated : 09 May 2020 02:30 PM
கடந்த வெள்ளிக்கிழமை வரை டெல்லி அரசு வெளியிட்ட கரோனா பலி எண்ணிக்கை 68 ஆக இருக்கும் போது இரண்டு மருத்துவமனைகளில் ஏற்பட்ட கரோனா மரணங்கள் எண்ணிக்கை 107 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது டெல்லி அரசு அறிவித்த கரோனா பலி எண்ணிக்கைகள், 2 மருத்துவமனைகளின் பலி எண்ணிக்கைகளை விட குறைவானது என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி அரசுச் செய்தித் தொடர்பாளரிடம் தி இந்து (ஆங்கிலம்) நாளேடு கேட்ட போது, அவர், “மருத்துவமனைகளில் மரணங்கள் நிகழ்ந்தாலும் அவை டெல்லி அரசு தணிக்கை மூலம் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அதன் பிறகே அது மருத்துவச் செய்தியில் இடம்பெறும்” என்று தெரிவித்தார்.
டெல்லி அரசு தகவல்களின் படி டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை வரை கோவிட்-19 தொடர்பான மரணங்கள் 27 என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பு அதிகாரி மீனாட்சி பரத்வாஜ் கூறும்போது பலி எண்ணிக்கை வெள்ளி வரை 52 என்றார்.
“எங்கள் மருத்துவமனையின் இறப்பு விகிதத்தை குறைவாக டெல்லி அரசு வெளியிடும்போது இருமுறை நாங்கள் பிரச்சனையை எழுப்பினோம். இதோடு எங்கள் மருத்துவமனையின் கரோனா பாசிட்டிவ் எண்ணிக்கையையும் அரசு குறைவாகவே கூறியது. நாங்கள் ஒவ்வொரு நாளும் தரவுகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம், இருந்தும் எப்படி குறைவாகச் சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை” என்றார்.
அதே போல் பெரிய அளவில் டெல்லி அரசு மருத்துவமனையான லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை வரை 5 மரணங்கள்தான் என்று டெல்லி அரசு கூறிவந்த நிலையில் வெள்ளி வரை 55 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி அரசு அறிவிக்கும் கோவிட் மரணங்கள் 10 மருத்துவமனைகளின் எண்ணிக்கையாகும். அதே வேளையில் பிற மருத்துவமனைகளில் இறந்த நோயாளிகளுக்கு பிறகு டெஸ்ட் செய்த போது கரோனா பாசிட்டிவ் இருந்த எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டது.
டெல்லி அரசு கடும் மறுப்பு:
ஆனால் டெல்லி அரசு இந்தக் குற்றச்சாட்டை அரசியல் நோக்கம் கொண்டது என்று மறுத்துள்ளது.
“இது முழுக்கவும் தவறு, அரசியல் நோக்கம் கொண்டது. கோவிட்-19 மருத்துவமனைகள் அறிவிக்கும் மரணங்களை சரிபார்க்கும் தணிக்கை குழு உள்ளது. ஒவ்வொரு மரணமும் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியின் பணிகளில் எந்த வித தலையீடும் இல்லை” என்று கடுமையாக மறுத்துள்ளது.
ஆனால் இந்த தணிக்கைக் குழு ஏப்ரல் 20ம் தேதிதான் அமைக்கப்பட்டது. ஏப்ரல் 20க்கு முன்பாக மரணங்களின் எண்ணிக்கை எப்படி வெளியிடப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக மருத்துவமனைகளுடன் பேசி வருவதாக சுகாதாரத்துறை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT