Published : 09 May 2020 11:32 AM
Last Updated : 09 May 2020 11:32 AM
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அனுப்பி வைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைக்கவில்லை எனக் குற்றம்சாட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா காட்டமான கடிதம் எழுதியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் ஷ்ராமிக் ரயில்களை மேற்கு வங்க அரசு தங்கள் மாநிலத்திலிருந்து இயக்க அனுமதி மறுத்து வருகிறது. இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலில் இருந்து மத்திய அரசும், மேற்கு வங்கத்தில் மம்தா அரசும் மோதிக்கொண்டு இருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் லாக்டவுன் முறையாகப் பின்பற்றவில்லை, கரோனா பரிசோதனைகள் முறையாக நடத்தவில்லை என்று குற்றம்சாட்டி மத்தியக் குழுவை மத்திய உள்துறை அனுப்பியது.
ஆனால் தங்களுடைய அனுமதியில்லாமல் மத்தியக் குழுவை அனுப்பிய மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் மம்தா பாரனர்ஜி, மத்தியக் குழுவுக்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையானது.
இதற்கிடையே மேற்கு வங்கத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களை மறைக்கிறது மம்தா அரசு என மத்திய அரசு குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அங்கு திடீரென உயர் பலி அதிகரித்த புள்ளிவிவரங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டது. போதுமான அளவு மருத்துவப் பரிசோதனை இல்லாதது, சமூக விலகல், கண்காணிப்பு இல்லாததுமே உயிர்பலி அதிகரிக்க காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டியது. நாட்டிலேயே அதிகமான உயிர்பலி சதவீதத்தில் மேற்கு வங்கம்தான் முதலிடத்தில் உள்ளது.
இந்த சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அனுப்ப ஒவ்வொரு மாநில அரசும் கேட்டுக்கொண்டபடி சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. மேற்கு வங்கத்தில் சிக்கி இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்ப மம்தா பானர்ஜி அரசு சிறப்பு ரயில்களை அனுப்ப ஒத்துழைக்க மறுப்பதாக மத்திய அரசு இப்போது குற்றம் சாட்டுகிறது.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ''கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலம் அனுப்பி வைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. ஆனால், மேற்கு வங்க அரசு மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. இது புலம்பெயர் தொழிலாளர்களைப் பெரிதும் துன்பப்படுத்தும்
புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலம் அனுப்புவதற்கு ரயில்கள் அனுப்புவதற்கு மேற்கு வங்க அரசிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ரயில்களை மேற்கு வங்க எல்லைக்குள் விட அனுமதிக்க அரசு மறுக்கிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். உங்களின் இந்தச் செயல் அவர்களை வேதனையில் ஆழ்த்தும்.
மேற்கு வங்கத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல ஆர்வத்துடன் இருக்கிறார்கள், அதற்காக மத்திய அரசும் ரயில்களை இயக்கத் தயாராக இருக்கிறது. ஆனால் மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT