Published : 09 May 2020 07:55 AM
Last Updated : 09 May 2020 07:55 AM
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே பத்னாபூர்-கர்மாட்ரயில் நிலையங்களுக்கு இடையேநேற்று காலையில் சரக்கு ரயில் மோதியதில் 16 தொழிலாளர்கள் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் இருப்பது தெரிந்ததும் என்ஜின் ஓட்டுநர் அவர்களை ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் ரயிலை நிறுத்தவும் அவர் முயற்சி செய்துள்ளார். ரயிலை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அதற்குள்ளாக விபத்து நடந்துவிட்டது.
வழக்கமாக சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 24 கிலோ மீட்டர்என இருக்கும். ஆனால் தற்போதுஊரடங்கு அமலில் இருப்பதாலும்,பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டதாலும் சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தென் மத்திய சர்க்கிள்) தலைமையில் உயர் நிலை விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர்களிடம் விபத்து குறித்து தீவிர விசாரணையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்துவார்.விசாரணை நிறைவடைந்ததும் அறிக்கையை ரயில்வே அமைச்சகத்திடம் அவர் ஒப்படைப்பார்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கண்காணித்து வருகிறார். காயமடைந்த 4 தொழிலாளர்கள் அவுரங்காபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ளார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT