Published : 08 May 2020 10:02 PM
Last Updated : 08 May 2020 10:02 PM
216 மாவட்டங்களில் இதுவரை யாருக்கும் கரோனா நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
பிளாசிட் என்ற பன்முக மைய ஆய்வகப் பரிசோதனை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) தொடங்கியுள்ளது. கோவிட் - 19 தொடர்பாக மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கட்டுப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனைக் கண்டறிவதற்காக'' இந்தப் பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு கோவிட்-19 தேசிய நன்னெறிக் குழு (கோனெக்) ஏப்ரல் 29இல் அனுமதி அளித்தது. இந்த பிளாசிட் ஆய்வகப் பரிசோதனை நடத்த 21 நிறுவனங்களை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, ராஜஸ்தான், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் தலா 2, பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, சண்டீகரில் தலா 1 மருத்துவமனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
216 மாவட்டங்களில் இதுவரை யாருக்கும் கோவிட் - 19 நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த் தாக்குதல் ஏற்படவில்லை. கடந்த 21 நாட்களில் 29 மாவட்டங்களில், யாருக்கும் புதிதாக நோய்த் தாக்குதல் கண்டறியப்படவில்லை. அதேபோல கடந்த 14 நாட்களில் 36 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த் தாக்குதல் ஏற்படவில்லை. கடந்த 7 நாட்களில் 46 மாவட்டங்களில் யாருக்கும் கோவிட் - 19 பாதிப்பு கண்டறியப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், நோய் பாதித்தவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், நோய் தாக்கியதாக சந்தேகம் ஏற்பட்டவர்கள் அல்லது நோய்த் தாக்குதல் கண்டறியப்பட்டவர்களுக்கு ஹோட்டல்கள், அடுக்குமாடி வளாகங்கள், விடுதிகளில் தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பகுதிக்கான வசதிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கூடுதல் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT