Published : 08 May 2020 02:48 PM
Last Updated : 08 May 2020 02:48 PM
கரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் மதுக்கடைகளில் மது விற்பனை செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே டோர் டெலிவரி செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
லாக்டவுன் காலத்தில் மது விற்பனை செய்யப்படுவது சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதிப்பதால், அதைத் தடை செய்யக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. ஆனால், ஆலோசனைகளை மட்டும் வழங்கியது.
கடந்த 3-ம் தேதிக்குப் பின் பல்வேறு மாநிலங்களிலும் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது. ஆனால் மது வாங்க வரும் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் வரிசையில் நிற்பதால் கரோனா பரவும் அச்சம் ஏற்படுகிறது.
இதைச் சுட்டிக்காட்டி கரோனா காலத்தில் லாக்டவுன் நடைமுறையில் இருக்கும்போது மது விற்பனை செய்வது சாமானிய மக்களுக்கு பெரும் இடையூறாகவும், அச்சமாகவும் இருப்பதால் தடை விதிக்கக் கோரி பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷான், சஞ்சய் கிஷன் கவுல் , பிஆர் காவே ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தீபக் சாய் ஆஜரானார். அவர் வாதிடுகையில், “லாக்டவுன் காலத்தில் மது வாங்க வரும் மக்களிடையே சமூக விலகலைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கிறது. ஏனென்றால் குறைவான மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படுகின்றன என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. சாமானிய மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் நோக்கம். மது விற்பனை தொடர்பாக உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்
இதைக் கேட்ட நீதிபதிகள் அசோக் பூஷான், சஞ்சய் கிஷன் கவுல், பிஆர் காவே ஆகியோர் அளித்த ஆலோசனையில், “இந்த வழக்கில் நாங்கள் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. ஆனால் மதுவகைகளை மக்களுக்கு மறைமுக விற்பனை மூலம் வழங்கலாம். அதாவது, மதுவகைகளை தேவைப்படுவோரின் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யலாம். இதை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். இது எங்களின் ஆலோசனைதான்.
லாக்டவுன் காலத்தில் மதுக்கடைகளிலும் சமூக விலகல் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். மதுவகைகளை டோர் டெலிவரி செய்வது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. சில நிறுவனங்களும் விருப்பமாக இருக்கும்போது நாங்கள் என்ன சொல்ல முடியும்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT